Our Feeds


Sunday, July 11, 2021

www.shortnews.lk

அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டை கண்டித்து நாங்களும் போராடுவோம்! - எல்லே குணவங்க தேரர் எச்சரிக்கை

 



(இராஜதுரை ஹஷான்)


பொதுமக்கள் மீது அரசாங்கம் கட்டவிழ்த்து விடும் அடக்கு முறைகள் ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் விரோதமானவை. இந்நிலை தொடர்ந்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்படும்.

எனவே அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டை கண்டித்து இனி போராடுவோம் என எல்லே குணவங்க தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பொதுமக்கள் முன்னெடுத்த போராட்டத்தை பாதுகாப்பு தரப்பினரே அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைத்தார்கள் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

பொதுமக்கள் மீது அரசாங்கம் கட்டவிழ்த்துவிடும் அடக்கு முறைமைகள் ஜனநாயக கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. நாட்டில் தற்போது ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் அரச அதிகாரத்துடன் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கூறிக் கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கு தொடர்ந்தால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்படும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இனி நாமும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரைவார்க்கும் முயற்சியை அரசாங்கம் தற்போது  முன்னெடுத்துள்ளது. கொழும்பு நகரில் உள்ள பெரும்பாலான காணிகளை பல்வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் இரகசியமன முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றில் வழக்கு தாகக்ல் செய்துள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »