Our Feeds


Wednesday, July 14, 2021

www.shortnews.lk

நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தித் தருமாறு மக்கள் கோரிக்கை

 


இலங்கை மக்களின் வைத்தியத் தேவையின் ஒரு பகுதியை ஆயுர்வேத மத்திய மருந்தகங்களும் ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலைகளும் நிறைவேற்றுகின்றன.


அந்த வகையில், நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் ஆயுர்வேத மத்திய மருந்தகங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கான வைத்திய சேவையினைத் திறன்பட வழங்கப்பட்டு வருகின்றது. 


மக்களின் தேவை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு மத்திய மருந்தகங்கள் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்பட்டு அதற்கான ஆளனி, பௌதீக வளங்களை மேன்படுத்தப்பட்டு சிறப்பான சேவைகளை மாகாண சுதேச வைத்தியத்துறைத்  திணைக்களமும் மற்றும் மத்திய சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமப்புற மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் மேம்பாடு மற்றும் சமூக ஆரோக்கிய அமைச்சும் மேற்கொண்டு வருகின்றன.


அதன் அடிப்படையில், கடந்த 26.09.2011ம் திகதி முதல் இயங்கி வரும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தியாவட்டுவான் நாவலடி மத்திய மருந்தகமும் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். 


கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் அத்தியாவசியத் தேவையாக ஆயுள்வேத வைத்தியசாலையின் தேவை இருந்து வருகின்றது.


கல்குடா தொகுதியை உள்ளடக்கிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மத்திய மருந்தகங்கள் காணப்பட்டாலும், அவை எவையும் இதுவரை மத்திய மருந்தகங்கங்களுக்குரிய தரத்தில் தரமுயர்த்தப்படவோ போதியளவு ஆளனி, பௌதீக வளங்கள் செய்து கொடுக்கப்படவோ இல்லை.


குறித்த தியாவட்டுவான் நாவலடி மத்திய மருந்தகம் கொழும்பு-மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு- திருமலை பிரதான வீதியில் அமைந்துள்ளமையினால் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மிக இலகுவான போக்குவரத்து செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன்,  மேற்குறித்த ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தினமும் அதிகளவான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இருந்த போதிலும், தங்கிச்சிகிச்சை பெறும் மேம்படுத்தப்பட்ட வசதியினமை காரணமாக மேலதிகச் சிகிச்சைக்காக தூரப்பிரதேசங்களிலுள்ள மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை உருவாவதுடன், ஏறாவூர், புதுக்குடியிருப்பு போன்ற தூரப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.


இப்பிரதேச எல்லைக்குள் அதிகளவான கிராமங்கள் பின் தங்கிய பிரதேசங்களாகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களைக் கொண்டதாகவும் காணப்படுவதன் காரணமாக பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.


குறித்த தியாவட்டுவான்-நாவலடி மத்திய மருந்தகமானது போதியளவு  நிலப்பரப்பு, நீர் வசதி உட்பட போக்குவரத்துக்கு மிக இலகுவாகவும் காணப்படுவதன் காரணமாக மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்தப்படுமேயானால் மேற்குறிப்பிட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைக்குள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் ஓர் வரப்பிரசாதமாக அமையும்.


அத்தோடு, தற்போதைய அரசாங்கமும் ஆயுர்வேத வைத்தியத்துறைக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாண சுதேச மருத்துவத்துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் இதனை தரமுயர்த்தத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். 


பொதுவாக ஒரே மாகாணத்தில் அல்லது மாவட்டத்தில் ஒரே தரத்திலுள்ள இரு வெவ்வேறு  வைத்தியசாலைகளில் சிகிச்சையின் தரம் வேறுபடுகிறது. 


இதற்குப்பிரதான காரணம் ஒரு வைத்தியசாலை மத்திய அரசின் கீழும் மற்றயது மாகாண அரசின் கீழும் பராமரிக்கப்படுவதாகும்.


இது மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்திருப்பதால் இதனைத் தரமுயர்த்துவதனூடாக பல்வேறு மருத்துவச் சாதனைகளையும் ஆயுர்வேத வைத்தியத்துறையில் பல்வேறு மாற்றங்களையும் எதிர்காலத்தில் கொண்டு வருமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.


தியாவட்டுவான்-நாவலடி மத்திய மருந்தகத்தினை ஏ தரத்திற்கு தரமுயர்த்தி தங்கிச் சிகிச்சை பெறும் வசதியை ஏற்படுத்த கடந்த 2019 மே மாதமளவில் முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்ல்லாஹ்வின் காலப்பகுதியில் முன்னெடுப்புச் செய்யப்பட்டது. 


கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தால் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளும்படி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின செயலாளருக்கு கடந்த 17.01.2020 கடிதம் அனுப்பப்பட்டும் அக்கடிதம் எந்தவித முன்னெடுப்பும் எடுபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.    


இப்பிரதேசத்தில் மத்திய மருந்தகங்கள் காணப்பட்ட போதிலும் மின்னேரியா போன்ற தூர இடங்களிலும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் காணப்படுவது போன்று நோயாளர் தங்கி சிகிச்சை பெறுமளவில் வசதியுடன் கூடிய மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை இல்லாமை பெறுங்குறைபாடாகவே காணப்படுகின்றது. 


அவ்வாறு தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையேற்பட்டால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணம், நேர காலங்களைச் செலவு செய்து மேற்குறித்த தூர இடங்களிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கே சொல்ல வேண்டியுள்ளது. 


தற்போதைய கொரோனா அச்சுறுத்தல், முடக்கம், பயணத்தடை உள்ள சூழலில் இவைகள் சாத்தியமில்லாத நிலையில், இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவது காலத்தின் கட்டாயத் தேவையாகும். 


போதிய நிலப்பரப்புள்ள நிலையில், கட்டட வசதிகள், ஆளணி என்பவற்றை அதிகரிப்பதனூடாக இதனை சாத்தியப்படுத்தலாம்.


தற்போதைய சூழலில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாகக் காணப்படுவதுடன், இப்பிரதேச நோயாளர்களின் வைத்தியத் தேவையை பல்வேறு தேவைப்பாடுகளுடன் ஓரளவு தியாவட்டுவான், நாவலடி மத்திய மருந்தகம் நிவர்த்தி செய்து வருகின்றது. 


அந்த வகையில், குறித்த மத்திய மருந்தகத்தை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.


எஸ்.எம்.எம்.முர்ஷித்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »