Our Feeds


Monday, July 12, 2021

www.shortnews.lk

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வரக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு - அமைச்சு பதவியை எதிர்பார்த்து நாம் அரசியல் செய்யவில்லை.

 



(ஆர்.யசி)


பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்துக்கு வருவது குறித்தோ அல்லது அவர் அமைச்சுப் பதவி பெற்றுக்கொள்வது குறித்தோ எம்மத்தியில் எந்த முரண்பாடுகளும் இல்லை.

20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்த வேளையில் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர்கள் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது என்பதையே நாம் கூறி வந்தோம். இப்போதும் அதே நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் என அமைச்சர் விமல் வீரவன்ச கூறுகின்றார். எனது மௌனத்தின் அர்த்தம் என்னவென்பது ஒரு சிலருக்கு நன்றாக விளங்கும் எனவும் அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்துக்குள் பங்காளிக் கட்சிகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளில் பங்காளிக் கட்சிகள் வெளிப்படையாக விமர்சனக் கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச நீண்ட நாட்களுக்கு பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,

பஷில் ராஜபக்க்ஷ, நாடாளுமன்றத்துக்கு வருவது குறித்தோ அல்லது அவருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது குறித்தோ எம்மத்தியில் எதிர்ப்பு இல்லை, அதேபோல் அவர் நிதி அமைச்சராகி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார அல்லது அதில் தோல்வி காண்பார என்பதையும் என்னால் கூற முடியாது.

எனினும் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் சகலரதும் ஒத்துழைப்புகள் இருக்க வேண்டும். மேலும் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்த வேளையில் அதில் உள்ளடங்கியிருந்த இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர்கள் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது என்பதையே நாம் கூறி வந்தோம். இப்போதும் அதே நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர்கள் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது.

இந்த விடயங்களில் நான் அமைதியாக உள்ளேன் என்றாலும் அதிலும் அர்த்தம் உள்ளது. மௌமும் ஒரு வித குரல் என்றே நான் கருதுகின்றேன். எனது மௌனத்தின் அர்த்தம் என்னவென்பது விளங்கிக்கொள்ளும் நபர்களுக்கு நன்றாக விளங்கும். எவ்வாறு இருப்பினும் ஆரம்பத்தில் இருந்த எனது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை கூறிக்கொள்கிறேன்.

கேள்வி: பஷில் ராஜபக் ஷவை, நிதி அமைச்சராக நியமித்ததில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?

பதில் :- பஷில் ராஜபக்ஷவோ அல்லது நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினருக்கும் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. அந்த உரிமையை எங்களால் மறுக்க முடியாது.

கேள்வி: ஜனாதிபதியினாலும் பிரதமரினாலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்துக்குள் கொண்டுவரப்பட்டார் எனவும் கூறப்படுகிறேதே ?

பதில் :- அப்படியானால் ஜனாதிபதி ஏன் அமைச்சர்களுக்கு அதிகாரத்தை வழங்குகிறார், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களிடமும் உள்ளது. அந்த நிறைவேற்று அதிகாரம் அமைச்சரவை அமைச்சர்கள் மூலம் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு ரீதியாக செய்யப்பட வேண்டிய ஒன்று, ஜனாதிபதியால் செய்ய முடியாத ஒன்றும் அல்ல. தவறான கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்பதையே நாம் கூறுகின்றோம்.

கேள்வி: ஒரு சில அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் பறிபடப்போவதாக கூறுகின்றனர், உங்களின் அமைச்சுப்பதவி பறிபோகும் நிலை உள்ளதா?

பதில் :- ஏற்கனவே சில நிறுவனங்கள் பறிபோயுள்ளது. எப்பவால பொஸ்பேட் நிறுவனம் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டு நெடுநாட்கள் ஆகிவிட்டன. அமைச்சுப்பதவிகளை எதிர்பார்த்து நாம் அரசியல் செய்யவில்லை.

கேள்வி: அரசாங்கத்துக்குள் நீங்கள் இலக்குவைக்கப்பட்டு நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றீர்களா?

பதில் :- அவ்வாறு தெரிகிறதா, எனக் கூறியுள்ளார்,

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »