Our Feeds


Saturday, July 24, 2021

www.shortnews.lk

இலங்கைக்கு சொந்தமான 700 – 1000 வருட பழைமை வாய்ந்த 2000 மருத்துவ ஓலைச் சுவடிகளை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர முயற்சி

 



இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரான காலப் பகுதியில் நாட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட மிக பெறுமதி வாய்ந்த சுமார் 2000 ஓலைச்சுவடிகளை நாட்டிற்கு விரைவில் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.


இந்த ஓலைச் சுவடிகளை கொண்டு வருவது தொடர்பிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு சிகிச்சை ஊக்குவிப்பு, கிராமி மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி, சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

சுமார் 700 முதல் 1000 வருடங்கள் பழைமை வாய்ந்த மருத்துவ குறிப்புக்கள் அடங்கிய ஓலைச் சுவடிகள், சுமார் 200 முதல் 300 வருடங்களுக்கு முன்னர் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெறுமதியான ஓலைச் சுவடிகளில் பெரும்பாலானவை, பிரித்தானியாவிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும், ஏனைய ஓலைச் சுவடிகள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

பிரித்தானியாவின் அருங்காட்சியகத்திலுள்ள ஒரு ஓலைச் சுவடியின் பிரதியொன்றை பெற்றுக்கொள்வதற்காக, 25 ஸ்ரேலிங் பவுண் கோரப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்;.

இந்த ஓலைச் சுவடிகளில் பிரதிகளை மாத்திரமன்றி, இலங்கைக்கு சொந்தமான அனைத்து ஓலைச்சுவடிகளையும் இயலுமான விரைவில் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட இந்த ஓலைச் சுவடிகளுக்கு சரியான பெறுமதியை கூற முடியாது எனவும், அவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ள அனைத்து ஓலைச் சுவடிகளையும் விரைவில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »