Our Feeds


Monday, July 19, 2021

www.shortnews.lk

ஒரே இரவில் 3,009 பேர் கைது! - காரணத்தை அறிவித்த பொலிசார்

 



(எம்.மனோசித்ரா)


நாடளாவிய ரீதியில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின்போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 14, 927 பொலிஸார் சுற்றிவளைப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது சந்தேகத்துக்கிடமான 431 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 645 பேரும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த 98 பேரும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 1250 பேரும் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் ஐவரும் மற்றும் மது போதையில் வாகனம் செலுத்திய 580 பேரும் என 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், அம்பாறை, திருகோணமலை, எம்பிலிபிட்டி மற்றும் காலி ஆகிய பிரதேசங்களிலேயே சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவை தவிர போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 5,654 பேருக்கு எதிராக போக்குவரத்து கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »