Our Feeds


Friday, July 16, 2021

www.shortnews.lk

15 வயது சிறுமி பாலியல் கொடுமை: மாலைதீவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஷ்மலியை அடையாளம் காட்டிய சிறுமி!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


15 வயதான சிறுமி ஒருவர், இணையத் தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் மொஹம்மட் அஷ்மலி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (16) அவருக்கு நீதிமன்றம் பிணையளித்தது.

இன்று குறித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர், அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டபோது, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி அவரை அடையாளம் காட்டியதாக, வழக்கு விசாரணையின்போது மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம திறந்த மன்றில் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே, அவர் சார்பில் சட்டத்தரணி ஹர்ஷன மாத்தரகே முன்வைத்த பிணை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு கடும் நிபந்தனையின் அடிப்படையில் பிணையளித்தது.

25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்த நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம, சந்தேக நபரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து தற்போது பொலிஸ் பொறுப்பிலுள்ள அவரது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் ஒவ்வொரு ஞாயிறன்றும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிவான் உத்தரவிட்டார்.

மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் உயர் கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் தங்கியிருப்பதாகவும் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குறித்த சிறுமி அவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணைகளில் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசி வழக்கு பொருள் இல்லையெனில் அவரிடம் மீள கையளிக்க பொலிஸாருக்கு உத்தரவிடுமாறும், வழக்கு பொருள் எனில், அத்தொலைபேசியில் உள்ள இலங்கை, மாலைதீவு சிம் அட்டைகள் இரண்டை மட்டுமேனும் கையளிக்க உத்தரவிடுமாறும் சந்தேக நபரின் சட்டத்தரணி மன்றைக் கோரினார்.

அதனை ஆராய்ந்த நீதிமன்றம், குறித்த சிம் அட்டைகளை கையளிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன், தொலைபேசியில் உள்ள தகவல்களே விசாரணைக்கு அவசியம் என்பதால் அதனை பெற்றுவிட்டு தொலைபேசியை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் சில சந்தேக நபர்களும் அடையாள அனிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் தொடர்பில் பொலிஸாரால் தண்டனைச் சட்டக் கோவையின் 360 ( அ), (இ) ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், பாலியல் வர்த்தகம், மனிதக் கடத்தல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்களையும் பாதிக்கப்பட்ட சிறுமி அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டிய நிலையில், அவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடையாத நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு பிணையளித்தால் விசாரணைகள் பாதிக்கப்படலாம் எனும் விடயத்தை மையப்படுத்தியும் அவர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்து, அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்த்ரவிட்டது.

பிணை வழங்கப்பட்ட மாலைதீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சருக்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் 19 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த சிறுமி துஷ்பிரயோக விவகாரத்தில் இன்று மாலை வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (படங்கள் ஜே. சஜீவகுமார்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »