தற்போது 111 நாடுகளில் காணப்படும் ‘டெல்டா’ வகை வைரஸ் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள ‘டெல்டா’ வைரஸ் பரவியுள்ளது.
டெல்டா, ஆல்பா, காமா, பேட்டா என நான்கு வகை உருமாறிய வைரஸ்களில் மிக விரைவாக பரவும் ஆற்றல் டெல்டாவுக்குத் தான் உள்ளது. இதனால் எதிர்வரும் நாட்களில் மேலும் பல நாடுகளில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மிகக் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நாடுகள் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும். உலகில் 178 நாடுகளில் ஆல்பா வைரஸ் காணப்படுகிறது. பேட்டா காமா வைரஸ்கள் முறையே 123 மற்றும் 75 நாடுகளில் பரவியுள்ளன.பல நாடுகளில் தொற்று நோய் கண்காணிப்பு பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் குறைவாக உள்ளன. அதனால் எப்போது எந்த வகை கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
தற்போது சர்வதேச போக்குவரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் நோய் தாக்கம் மற்றும் தீர்வுகளுக்கான செயல் திட்டங்களை வகுப்பது அவசியம். உலகில் 300 கோடி பேருக்கு குறைந்தபட்சம் ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது மொத்த மக்கள் தொகையில் 24.7 சதவீதம் தான்.’கோவாக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கான தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.