Our Feeds


Sunday, June 27, 2021

www.shortnews.lk

BREAKING: பசில் பாராளுமன்ற வருகைக்கு SLPP கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு - கூட்டணிக்குள் குழப்பங்கள் அதிகரித்துள்ளன - Prof. திஸ்ஸ விதாரண MP

 



(இராஜதுரை ஹஷான்)


இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரச நிர்வாகத்தில் உயர் பதவி வகிப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கும் புதிய அரசியலமைப்பின் ஊடாக தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஆளும் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு தீர்வு காண இதுவரையில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படாமை கவலைக்குரியது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் தடை விதிக்கப்பட்டது. இதனை சிறந்த ஒரு செயற்பாடு என வரவேற்றோம். இத்தடை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததில் நீக்கப்பட்டது.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதுடன், அரச உயர் பதவிகளில் தலைமைத்தவம் பதவி வகிக்கலாம் என அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபில் குறிப்பிடப்பட்டது. இதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பிரதான பங்காளி கட்சியினர் கடுமையான எதிர்ப்பை ஒன்றிணைந்து வெளிப்படுத்தினோம்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை தற்காலிக ஏற்பாடாக மாத்திரம் கருத வேண்டும். இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு 20 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட சலுகை புதிய அரசியமைப்பின் ஊடாக நீக்கப்படும். அத்துடன் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் முரண்பாடற்ற யோசனை உள்வாங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வாக்குறுதி வழங்கினார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம்.

பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்க்ஷ தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வருவதாக குறிப்பிடப்படுகிறது. இவரது நாடாளுமன்றம் பிரவேசம் குறித்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. கூட்டணியின் பல தரப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையிலான முரண்பாடுகள் நாளாந்தம் தீவிரமடைந்துள்ளதே தவிர குறைவடையில்லை. பல விடயங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தியுள்ளன. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு சிரேஷ்ட தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தும் பயனற்றதாக உள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »