இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல ஆகியோரின் இங்கிலாந்துக்கான ஆனந்த சவாரி அஸ்தமித்துள்ளது.
இங்கிலாந்தில் இருவரும் சுகாதார பாதுகாப்பு குமிழி நெறிமுறை மற்றும் ஹொட்டேல் ஊரடங்கை மீறினார்கள் என்ற காரணத்துக்காக இருவரையும் உடனடியாக நாடு திரும்புமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (எஸ்எல்சி) பணித்துள்ளது.
அவர்கள் இருவரும் நாடு திரும்பக்கூடிய முதலாவது விமானத்தில் அங்கிருந்து புறப்படவேண்டும் எனவும் எஸ்எல்சி அறிவித்துள்ளது.
இதேவேளை, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு இந்த இரண்டு வீரர்கள்; தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அணி முகாமையாளருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவர் இங்கிலாந்தின் வீதிகளில் அலைந்து திரிவது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகத்தில் பரப்பப்பட்ட வண்ணம் உள்ளது.
இதனை அடுத்து இலங்கை அணியின் உதவித் தலைவர் குசல் மெண்டிசையும் விக்கெட்காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவையும் இலங்கை குழாத்திலிருந்து உடனடியாக நீக்குவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளதுடன் அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு அணி முகாமைத்துவத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் இருவரும் நாடு திரும்பியதும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.