(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளே தற்போது அரசியல் களத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. கூட்டணியின் பங்காளி கட்சிகளின் பிரச்சினை மற்றும் அவர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண பிரதமர் அக்கறை கொள்ளவில்லை. எம். சி. சி ஒப்பந்தம், சோபா ஒப்பந்தம் செயற்படுத்தப்படுமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன பெரமுன தலைமைத்துவமாக கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வலுப் பெற்றுள்ளன. கூட்டணியின் பங்காளி கட்சிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
நாடாமன்றில் உள்ள ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குபவர்களாக உள்ளார்கள். தற்போதைய நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை பல்வேறு காரணிகள் ஊடாக அறிந்துக் கொள்ள முடிகிறது என்றார்.