ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அக்டோபர் 17ஆம் திகதிமுதல் நவம்பர் 14ஆம் திகதிவரை நடைபெறும் என ஐசிசி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய், அபு தாபி, ஓமான் ஆகிய நகரங்களிலுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்குகளிலும் ஓமான் கிரிக்கெட் பயிற்சியக மைதானத்திலும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்தது.
இப் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் தீவிரமடைந்துள்ளதால் இப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சித்துக்கு மாற்றப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை திங்கட்கிழமை அறிவித்திருந்தது.
இந் நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த மாற்றம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்றைய தினமே வெளியிட்டது.
எவ்வாறாயினும் இப் போட்டிகளை முன்னின்று நடத்தும் உரிமைத்துவம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கே இருக்கும்.
எட்டு தகுதிகாண் நாடுகள் பங்குபற்றும் முதலாம் சுற்று கிரிக்கெட் போட்டிகள் ஓமானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் அக்டோபர் 17ஆம் திகதியிலிருந்து 23ஆம் திகதிவரை நடத்தப்படும்.
தகுதிகாண் சுற்றில் இலங்கை, அயர்லாந்து, ஓமான், பப்புவா நியூ கினி ஆகியன ஏ குழுவிலும் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகியன பி குழுவிலும் விளையாடும்.
தகுதிகாண் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் 4 நாடுகள் பிரதான சுற்றான சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும்.
சுப்பர் 12 சுற்றில் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் 2 தகுதிகாண் அணிகள் முதலாம் குழுவில் இணையும்.
ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகியவற்றுடன் மேலும் 2 தகுதிகாண் அணிகள் இரண்டாம் குழுவில் இணையும்.
சுப்பர் 12 சுற்று அக்டோபர் 24ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 8ஆம் திகதி நிறைவுபெறும். நவம்பர் 11, 12ஆம் திகதிகளில் அரை இறுதிகளும் 14ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.