(எம்.மனோசித்ரா)
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது சர்ச்சைக்குரிய சீன இராணுவ ஆடை தொடர்பில் கேட்கப்பட்டபோது இவ்வாறு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறுகையில் ,
தொல்பொருளியல் சட்டம் மீறப்பட்டுள்ளது என்றால் நாட்டில் சட்ட கட்டமைப்பொன்று உள்ளது. அதற்கமைய இதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் சாதாரண ஒரு விடயத்துக்குக் கூட நீதிமன்றத்துக்குச் செல்லும் நிலைமை காணப்படுகிறது. எனவே நாட்டில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சுயாதீன அமைப்புக்கள் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் முழுமையான விசாரணை இராணுவத்தினராலும் குற்ற விசாரணைப் பிரிவினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஒரு சில தரப்பினர் ஏதேனுமொன்றை தேட முயற்சிக்கின்றனர். எனினும் சிலர் கூறுவதைப்போது தொல்பொருளியல் சட்டம் முழுமையாக மீறப்பட்டிருக்கிறது என்றால் 24 மணித்தியாலங்களுக்குள் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
இது தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் நாமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்கள் அணிந்திருந்தது இராணுவ சீருடை அல்ல என்றும் சாதாரண ஆடை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆடையை அணிய முடியும் என்று குற்ற விசாரணைப்பிரிவும் , இராணுவ புலனாய்வுப் பிரிவும் அறிவித்துள்ளது. இந்த ஆடையை அணிந்திருந்தவர்கள் சீன சிப்பாய் அல்ல என்று குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.