இலங்கையில் நடைமுறையில் உள்ள காதி நீதிமன்றங்களை ஒழிப்பது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகின்றது. இது குறித்து அரசுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது:
இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னைய காலத்திலிருந்து முஸ்லிம் சட்டம் அமுலில் இருந்து வருகின்றது. அதன்படி தோற்றுவிக்கப் பட்டது தான் காதி நீதிமன்றங்கள். இந்த காதி நீதிமன்றங்களை மூடி விட அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதிலிருந்து இந்த அரசாங்கம் முஸ்லிம் சமுகத்தை எவ்வாறு கையாள்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது.
இந்த அமைச்சரவை தீர்மானம் குறித்து அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதுவரை எவ்வித கருத்துகளும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா என்ற கேள்வி எழுகின்றது.
இந்தக் கட்சிகள் முஸ்லிம் மக்களின் உரிமையை வென்றெடுப்பதாகத் தோற்றுவிக்கப்பட்ட கட்சிகள் என்று தான் மக்கள் மத்தியில் ஊடுருவின. அநேகமாக எல்லா தேர்தல் மேடைகளில் முஸ்லிம்களின் உரிமைகள் பற்றிய வாசகங்கள் ஒலிக்கின்றன.
காதி நீதிமன்றங்கள் முஸ்லிம்களின் வாழ்வியல் சம்பந்தமானவை. சமய விவகாரங்களோடு தொடர்புபட்டவை. இது இந்த சமுகத்தின் மிக முக்கிய உரிமைகளுள் ஒன்று. இந்த காதி நீதிமன்றங்களை ஒழிக்கத்தான் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதனைவிட உரிமை மீறல் எதுவும் இருக்க முடியாது. எனவே, இதுவிடயத்தில் இந்த கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
காபட் வீதி, ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமை, அமைச்சுக்களின் ஆலோசனை சபை உறுப்பினர் போன்ற சலுகைகளுக்கு இந்தக் கட்சிகள் துணை போய் விட்டதான குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
காதி நீதிமன்றங்கள் விடயத்தில் இந்தக் கட்சிகளின் மௌனம் இந்தக் குற்றசாட்டுக்களை உறுதிப்படுத்துவதாக அமைந்து விடும்.
எனவே, காதி நீதிமன்ற ஒழிப்பு தொடர்பாக அரசுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகள் தமது நிலைப்பாடு என்ன என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.