(இராஜதுரை ஹஷான்)
அனைத்து தரப்பினரது கோரிக்கைக்கு அமைய பஷில் ராஜபக்க்ஷ விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகையானது அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பலமாக அமையும். முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சி காலத்தில் பொருளாதாரம் மற்றும் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
நாடாளுமன்றுக்கு வருகை தந்து அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவரிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஆனால், அவர் இதுவரையில் அவ்விடயம் குறித்து உரிய தீர்மானத்தை எடுக்கவில்லை.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும் என 40க்கும் அதிகமான பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்து அதனை எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்கள்.
பஷில் ராஜபக்க்ஷ வெகுவிரைவில் நாடாளுமன்றம் வருவதுடன் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான அமைச்சரவை பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கிறோம் . ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சியின் உறுப்பினர்களும் இவ்விடயத்தில் இணக்கம் தெரிவித்துள்ளார்கள. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பஷில் ராஜபக்க்ஷ சாதகமான தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.