கனடாவில் வழக்கத்துக்கு மாறாக கடும் வெப்பநிலை காரணமாக இதுவரை 140 பேர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது
கனடாவின் மேற்கு பகுதியிலும் மற்றும் அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதியிலும் கடும் வெப்ப அலை தாக்கியுள்ளது. இதன்காரணமாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து 155 மைல் தொலைவில் உள்ள லிட்டன் கிராமத்தில் அதிகபட்சமாக 121 டிகிரி பாரன்ஹீட் (49.5 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பொலிஸாரின் தகவலின் படி கடும் வெப்பநிலை காரணமாக Vancouver பகுதியில் இதுவரை 140 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வெப்ப நிலை உயர்வின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 65 பேர் திடீரென உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்ற வெப்பநிலையை நாங்கள் பார்த்ததில்லை. துரதிர்ஷ்டவசமாக டஜன் கணக்கில் மக்கள் இறந்துக்கொண்டிருக்கிறார்கள் என Vancover பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இந்த சூற்றுச்சூழல் மாற்றம் காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பெர்டா, சஸ்காட்செவன், மனிடோபா மற்றும் யூகோன் பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மோசமான வெப்பநிலை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வான்கோவெர் பகுதியில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆங்காங்கே செயற்கை நீரூற்றுகள், மிஸ்டிங் ஸ்டேஷன்கள் தெருக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும், குளிர்சாதன அறைகளில் இருங்கள், முடிந்தளவு நிறைய தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் உறவினர்களை பார்த்துக்கொள்ளுங்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.