(செ.தேன்மொழி)
குருணாகல் நீதிமன்ற வளாகத்திலுள்ள சிறை அறைகளில் சிறைவைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகள் நால்வர் இன்று (27) தப்பிச் சென்றுள்ளார். எனினும் இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோரை தேடும் பணிகள் (நேற்று மாலை வரை) தொடர்வதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த கைதிகள் நால்வரும் நேற்று குருணாகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெல்லவ,மாவத்தகம மற்றும் தெல்கொல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்களுள் ஒரு கைதி நேற்றைய தினம் குருணாகல் – வெல்லவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய மூன்று கைதிகளையும் கைது செய்வதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.