(எம்.மனோசித்ரா)
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பக்கபலமாக இருப்பதற்கு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வருமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்துக்கு வெளியிலிருந்து செயற்படுவதனை விட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே தேவையாகும் என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடித்துறை உள்ளிட்ட ஏனையதுறைகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாகும். எனவே பஷில் ராஜபக்க்ஷ இது தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் முழு பொருளாதார முகாமைத்துவம் , நாட்டின் அபிவிருத்தி உள்ளிட்ட பணிகளில் பஷில் ராஜபக்ஷ அர்ப்பணிப்புடன் பல சேவைகளை ஆற்றியிருக்கிறார். வடக்கின் வசந்தம் , கிழக்கின் உதயம், கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் உள்ளிட்ட வௌ;வேறு வேலைத்திட்டங்களுக்கு அவர்கள் தலைமைத்துவம் வகித்துள்ளார்.
தற்போதைய கொவிட் பரவலால் இலங்கையைப் போலவே உலகின் பொருளாதாரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால் இலங்கையிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடித்துறை உள்ளிட்ட பல துறைகளும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன.
இதற்காக மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாகும். இதற்காக பஷில் ராஜபக்க்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து எதிர்வரும் தினங்களில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.