சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையில் நாணயக் குற்றிகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இயங்கும் கட்சியொன்றை கெளரவிக்கும் வகையில் இலங்கையில் முதல் தடவையாக இவ்வாறு நாணயக் குற்றிகள் வெளியிடப்படவுள்ளதாக தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அந்த கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, சீனாவும் நாணயக் குற்றிகளை வெளியிட்டு, இலங்கை மத்திய வங்கிக்கும், ஏனைய நட்பு நாடுகளுக்கும் இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன மத்திய வங்கியினால் நாணயக் குற்றிகள் வெளியிடும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மூன்று தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஒரு செப்பு நாணயக் குற்றிகள் முதற்கட்டமாக வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், சீனாவின் கட்சியொன்றிற்காக நாணயக் குற்றி வெளியிடப்படுவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.