இஸ்ரேல் நாட்டில் டெல்டா வைரஸ் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டுச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இஸ்ரேல் நாட்டில் கடந்த நான்கு நாட்களாகத் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் 227 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும் என மருத்துவ குழுவினர் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த் தொற்று குறைந்து வந்தநிலையில் தற்போது டெல்டா வைரஸ் கொரோனா காரணமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் இந்த டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் மீண்டும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். குறிப்பாக அரங்க கூட்டங்கள் மற்றும் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளுக்குச் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டு மக்கள் தொகையை பொறுத்தவரையில் 8,787,695 பேர் உள்ளனர். அவர்களில் 5.2 கோடி மக்களுக்குக் கடந்த ஜூன் 15-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியத் தேவையில்லை என இஸ்ரேல் அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் வெளியிட்டுள்ள தகவலின் படி டெல்டா கொரோனா தற்போதுவரை 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா வகை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.