Our Feeds


Wednesday, June 23, 2021

www.shortnews.lk

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்தால் சிறைத் தண்டனை : பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை!

 



கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மறுத்தால் சிறைத் தண்டனை  விதிக்கப்படும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பிலிப்பைன்ஸ்  ஜனாதிபதி,  ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சிறிய குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்கிற சர்வாதிகார போக்கு மனம் உடையவர்.

அண்மையில் கூட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வீதிகளில் சுற்றித்திரியும் நபர்களை சுட்டுக்கொல்ல பொலிஸாருக்கும், இராணுவத்துக்கும் அனுமதி வழங்கி நாட்டு மக்களை கதி கலங்க வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸில் இதுவரை 13 லட்சத்து 67 ஆயிரத்து 894 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23 ஆயிரத்து 809 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கொரோனா வைரஸ் 2ஆவது அலை உருவாகும் அபாய சூழல் உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

ஆனால் 11 கோடி மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்சில் இதுவரை 21 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில்தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை என்கிற அறிவிப்பை அதிபர் ரோட்ரிகோ துதர்தே வெளியிட்டுள்ளார்‌.

தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியதாவது:-

என்னை தவறாக எண்ணாதீர்கள். நாட்டில் ஒரு நெருக்கடி நிலவுகிறது. தேசிய அவசர நிலை உள்ளது. எனவே தடுப்பூசியா அல்லது சிறையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் நான் உங்களை கைது செய்வேன். பின்னர் நானே உங்களுக்கு ஊசி போடுவேன். நீங்கள்‌ தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால் பிலிப்பைன்சை விட்டு வெளியேறுங்கள். இந்தியா அல்லது அமெரிக்கா எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் பிலிப்பைன்சில் இருந்தால் நீங்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.‌ இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »