(எம்.மனோசித்ரா)
நாட்டில் 80 சத வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளியைப் பேணல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்காவிட்டால் டெல்டா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடுகள், தடுப்பூசி வழங்குதல் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றல் என்பவற்றின் ஊடாக மாத்திரமே டெல்டா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறான நிலைமையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளமையை பொதுமக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை குறைப்பதற்காக மாத்திரமே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனை உணர்ந்து செயற்படாவிட்டால் டெல்டா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. இந்நிலையில் தொற்று நோயியல் பிரிவு பல பிரதேசங்களில் எழுமாறான பிசிஆர் பரிசோதனைகளை அதிகரித்து , அதன் உண்மை நிலைவரத்தை வெளிப்படுத்தாவிட்டால் நாடு பாரதூரமான நிலைமையை அடையும்.
தற்போது நாட்டில் சமூக தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை தொற்று நோயியல் பிரிவினாலேயே ஸ்திரமாகக் கூற முடியும். ஆனால் அண்மையில் நாட்டில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமையை அவதானிக்கும் போது சமூக தொற்று ஏற்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. எனவே தொற்று பரவல் தொடர்பில் உண்மையான தகவல்கள் கிடைக்கப் பெறுவதை அடிப்படையாகக் கொண்டே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்றார்.