ஜம்மு பிராந்தியத்திலுள்ள ஜம்மு விமானப்படை நிலையத்தில் (the Jammu Air Force station ) இன்று காலை இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து இந்திய விமானப்படை விசாரணை நடத்துகிறது.
ஆளில்லா விமானகள் (ட்ரோன்) மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் படை நிலையமொன்றின் மீதான முதலாவது ட்ரோன் தாக்குதலாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஜம்மு விமானப்படை நிலையத்தில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் 5 நிமிட இடைவெளியில் இரு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மேற்படி விமானப்படை நிலையத்திலிருந்த விமானங்கள் இலக்கு தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதலில் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை எனவும் ஆனால்,இருவர் காயமடைந்துள்ளனர் என மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் தொழில்நுட்பப் பிரிவு கட்டடமொன்றின் கூரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.