(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரேபியாவில் வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தொழுகை நேரங்களில் கடைகளையும், வர்த்தக நிலையங்களையும் மூடுவதில்லை எனும் தனது சிபாரிசு தொடர்பான கலந்துரையாடலை அந்த நாட்டின் சூராகவுன்ஸில் பிற்போட்டுள்ளது.
இஸ்லாமிய விவகார அமைச்சின் வருடாந்த அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் அமர்வு கடந்த திங்கட்கிழமை இடம்பெறவிருந்த நிலையில் அமர்வு இடம்பெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்பு சூராகவுன்ஸில் தனது தீர்மானத்தை உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தொழுகை நேரங்களில் வர்த்தக நிறுவனங்களை மூடுவதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் சூரா கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை அமர்வில் சூரா கவுன்ஸிலின் இரு விஷேட சிபாரிசுகள் தொடர்பில் கலந்துரையாடி வாக்களிப்பு இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முதலாவது சிபாரிசு கலாநிதி பஹத் அல் துக்கைபி மற்றும் பொறியியலாளர் அலி அல்கர்னி ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.
இஸ்லாமிய விவகார அமைச்சு தனியார் மயப்படுத்தும் தேசிய நிலையத்துடன் இணைந்து அமைச்சின் சில சேவைகளை தனியார் மயப்படுத்தல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பள்ளிவாசல்களின் கட்டிடங்களை பழுதுபார்த்தல் மற்றும் துப்புரவு செய்தல் போன்ற அமைச்சின் சேவைகள் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் தொழுகை நேரங்களில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை மூட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. இந்த குறிப்பிட்ட சிபாரிசு சூராகவுன்ஸில் உறுப்பினர்களான அட அல்சுப்ஹைதி, கலாநிதிகளான பைசால் அல்பாதில், லதீபா அல் ஷாலான், லதீபா அல் அப்துல் கரீம் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. இஸ்லாமிய விவகார அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எரிவாயு நிலையங்கள், பாமசிகள் என்பன உட்பட வர்த்தக நிறுவனங்களை வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்டகளில் தொழுகை நேரங்களில் மூடும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என இவர்கள் சிபாரிசினை முன் வைத்துள்ளனர்.
மேலும் தனது ஏனைய சிபாரிசுகளையும் பிற்போட்டுள்ளது. இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள் தொடர்பான தீர்மானங்களையும், சுற்று நிருபங்களையும் துரிதப்படுத்த வேண்டும் எனும் சிபாரிசும் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சு இமாம்களுக்கும் மத போதகர்களுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.- Vidivelli