றிப்தி அலி
"நீரிழிவு நோய்க்கான மருந்துகளையும், சிறிது அரிசியையும் வாங்குவதற்காக சைக்கிளில் சென்ற போது இராணுவத்தினர் என்னைப் பிடித்து கையை உயர்த்தியபடி முழங்காலில் அமருமாறு உத்தரவிட்டனர்" என கூறுகின்றார் ஏறாவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த 43 வயது முகமட் இஸ்மாயில் மர்சூக்.
கொரோனாவினால் வருமானம் இல்லாமலாகி ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள நிலையிலேயே இவ்வாறு தாக்கப்பட்டு, அவமானப்படுத்தலுக்கு உள்ளாவேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
"நான் ஒரு நோயாளி என சிங்களத்தில் அவர்களிடம் தெரிவித்தேன். மருந்து வாங்குவதற்காக வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டது மாத்திரமன்றி எனது மருந்துப் பொட்டியையும் அவர்களிடம் காண்பித்தேன். ஆனால் இராணுவத்தினர் அதனை செவிமடுக்காமல் ஆடு, மாடுகளை அடிப்பது போல அடித்தனர்" என முகமட் இஸ்மாயில் மர்சூக் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் பிராயணத் தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அத்தியவாசிய சேவைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சுகாதார வழிமுறைகளைப் பேணி சில்லறைக் கடைகள் மற்றும் பாமசிகளை திறப்பதற்கும், அங்கு பொதுமக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
நடந்தது என்ன?
இதற்கமைய, நீரிழிவு நோய்க்கான மருந்து கொள்வனவிற்கு சென்றவர் உள்ளிட்ட பொதுமக்கள் சிலரை கடந்த சனிக்கிழமை (19) காலை ஏறாவூர் - 'மிச் நகர்' எனும் பகுதியில் இராணுவத்தினர் கைகளை உயர்த்தியவாறு முழங்காலில் இருக்க வைத்து தண்டித்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்ளான பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப் போன்றவற்றில் வைரலாகின.
இதனையடுத்து இராணுவத்தினரின் இந்த செயலை இன, மத, மொழி வேறுபாடின்றி பல்வேறு தரப்பினரும் விமர்சிக்கத் தொடங்கினர். எனினும், "குறித்த தண்டனை வீதியில் வந்ததுக்காக கொடுக்கப்பட்டது அல்ல. உணவகத்தினை திறந்து வியாபாரம் செய்தமைக்காகவே வழங்கப்பட்டது" என சம்பவ இடத்தில் நின்றுகொண்டு இருந்த பிர்தௌஸ் முஹம்மத் என்பவர் கூறுகின்றார்.
இது தொடர்பில் அவர் பேஸ்புகில் பதிவொன்றினை பதிவேற்றியிருந்தார். குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பிரயாணத் தடைக்கு மத்தியில் திறக்கப்பட்ட உணவகத்தின் வேலையாட்களும் அதில் உள்ளே இருந்து உணவு உண்டவர்களுமே இந்த தண்டனை பெற்றவர்களாவர்.
இராணுவத்தின் மூன்று முறை வந்து இவர்களை எச்சரிக்கை செய்தனர். இதனை மீறி ஹோட்டேலின் உணவு உண்டுகொண்டிருந்த போது இராணுவத்தினர் வருவதை கண்டு அவர்கள் வரும் முன் கதவை சாத்திவிட்டு உள்ளே அரை மணி நேரமாக திறக்காமல் அவர்களை கோபப்படுத்தினார்கள். இருந்தும் அந்த இடத்தில் ஈரம் இருக்கும் நெஞ்சமாகத்தான் படை வீரர்கள் நடந்துகொண்டார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டனங்கள்
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பான விமர்சனம் ஊடகங்களில் தொடர்ந்துகொண்டே இந்த இருந்தன. இதேவேளை, "நாடு சர்வதிகாரத்தை நோக்கிச் செல்வதையே ஏறாவூர் பொதுமக்கள் ராணுவத்தினரால் முழங்காலில் வைக்கப்பட்டமை எடுத்துக் காட்டுகிறது" என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கூறினார்.
"ஏறாவூர் சம்பவம் சட்டத்துக்கு புறம்பானது. இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது. வீதியில் முட்டுக்காலில் வைக்கப்பட்ட இந்த நிகழ்வு - சம்பந்தப்பட்டவர்களின் சுய கௌரவத்தைப் பாதித்திருக்கிறது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயணத்தடை அமலில் உள்ளபோது ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்வதைக் காண முடிவதாகவும், ஏறாவூரில் தமது அத்தியவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் வந்தவர்கள் இவ்வாறு இராணுவத்தினரால் தண்டிக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது நிலைப்பாட்டை பதிவுசெய்தார்.
"இராணுவத்தால் வழங்கப்பட்ட இந்தத் தண்டனை, இழிவான ஒரு செயற்பாடாகும். இந்த நடவடிக்கை சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கையின் படி ஒரு குற்றமாகும்" என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் குறிப்பிடுகின்றார்.
"இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது உறுப்புரையானது மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனையை தடைசெய்கிறது" என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நகர சபை மீதான குற்றச்சாட்டு
இராணுவத்தினை ஊர் பிரதேசத்திற்குள் அழைத்து வந்தது ஏறாவூர் நகர சபை என்ற குற்றச்சாட்டொன்று இந்த சம்பத்தினை அடுத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது. அது மாத்திரமல்லாமல், ஏறாவூர் பிரதேசத்தில் கடமையாற்றும் இராணுவத்தினருக்காக நகர சபையினால் விசேட வாகனமொன்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களை முழங்காலிட வைத்த சம்பவம் ஏறாவூர் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தினையும் ஏறாவூர் நகர பிதா எம்.எஸ்.நளீம் நிராகரிக்கின்றார்.
"ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கான தேவையான உதவிகளை வழங்குவதற்காகவே இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்" என நகர பிதா கூறினார்.
இந்த பணிக்காக இராணுவத்தினருக்கு தேவைப்பட்ட வாகன வசதிகள் இல்லாமையினால் சபையின் அனுமதியுடன் ஏறாவூர் நகர சபையினால் வாகனமொன்று வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
"எவ்வாறாயினும், இந்த சம்பவம் தவறுதலாக இடம்பெற்ற ஒன்றாகும். இதனைப் பயன்படுத்தி சிலர் குளிர்காய முயற்சிகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என நகர பிதா நளீம் கூறினார்.
"இந்த சம்பவத்தினை அடுத்து எமது பிரதேசத்தின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பாதுகாப்பு படையினர் தயக்கம் வெளியிடுகின்றனர். இதனால், எமது பிரதேசம் இன்று கொரோனா பரவல் விடயத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது" என அவர் தெரிவித்தார்.
இராணுவ விசாரணை
சுகாதார துறையினருடன் இணைந்து நாட்டில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு இராணுவம் தலைமை தாங்கி பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிக்கின்றது.
இதனால் கொவிட் - 19 தொடர்பான தேசிய செயலணிக்கு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை வகிக்கின்றார். இதனால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் பொதுச் சுகாதார நெருக்கடிக்கு படையினரை பயன்படுத்துவதை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையில் 10 சதவீதமாக உள்ள முஸ்லீம்கள் மீதான இலக்குவைக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச நிறுவனங்கள் தொடர்ச்சியாக கரிசனை செலுத்தி வருகின்ற தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால், குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் உடனடியாக (சனிக்கிழமை மாலை) பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இராணுவ பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக இராணுவம் தெரிவித்தது.
இராணுவத்தினர் ஒரு சிலரின் முறையற்ற நடத்தை குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, இராணுவ தளபதியின் உத்தரவுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த சம்பவம் தொடர்பில் சுமார் நான்கு மணித்தியாலமாக இராணுவ தலைமையகத்தில் வாக்குமூலம் கொடுத்தவண்ணம் உள்ளேன். அந்த இடத்தில் நான் இருந்தது நல்லது தானே இல்லை என்றால் உண்மை புதைந்து இருக்கும்" என சம்பவ இடத்தில் நின்றுகொண்டு இருந்த பிர்தௌஸ் முஹம்மத், தனது பேஸ்புகில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 7.55 பதிவேற்றியிருந்தார்.
இதேவேளை, கொழும்பு வீதிகளில் வாகனங்கள் நிறைந்து காணப்படும் படத்தையும் ஏறாவுவூர் சம்பவத்தின் படத்தையும் டுவிட்டர் பதிவாக வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், "இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரு நாடு இரண்டு சட்டங்கள் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது" என்றார்.
"குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதன் காரணமாகவே இராணுவம் சம்பவம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டது" எனவும் அவர் கூறினார்.
அவர்களால் இந்த சம்பவத்தை தற்போது விசாரணை செய்ய முடியுமென்றால் யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து ஏன் அவர்களால் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எழுப்பினார்.
ஏவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.