(ஏ.ஆர்.ஏ.பரீல்)
‘கடந்த வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டமையினால் ஓட்டமாவடி – மஜ்மா நகர் விசேட மையவாடியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படவில்லை. பயணத்தடை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கொரோனா தொற்று ஜனாஸாக்கள் ஓட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை’ என ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஏ. எம். நௌபர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை ஜனாஸாக்களின் நல்லடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ‘புதன்கிழமை வரை மஜ்மா நகர் மையவாடியில் 750 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 709 ஜனாஸாக்கள் முஸ்லிம்களுடையதாகும். மேலும் கிறிஸ்தவர்கள் 16 பேரினதும், இந்துக்கள் 16 பேரினதும், பௌத்தர்கள் 7 பேரினதும் வெளிநாட்டவர்கள் 2 பேரினதுமாக 41 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டமாவடி பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்தமை காரணமாக மீராவோடை மேற்கு, மீராவோடை கிழக்கு மற்றும் மாஞ்சோலை கிராம சேவை பிரிவுகள் தொடர்ந்தும் இரு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய மையவாடியில் விரைவில் இடப்பற்றாக்குறை ஏற்படும் எனக் கருதப்படுவதால் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் ஓட்டமாவடி பிரதேச சபை அதிகார எல்லைக்கும் உட்பட்ட சாப்பமடு கிராமத்தில் அரச காணியொன்று இனங்காணப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அக்காணியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. என்றாலும் அதற்குரிய பதில் இதுவரை கிட்டாததால் பிரதேச சபை நிர்வாகம் மட்டக்களப்பு அரசாங்க அதிபரை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. இதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அல் நூர் அமைப்பின் அனுசரணையுடன் காத்தான்குடி நகர சபை இரு கூடாரங்களை அமைத்துத் தந்துள்ளது. ஒரு கூடாரம் மையவாடிக்குள் பாதுகாப்பு பிரிவினரின் உபயோகத்துக்கு விடப்பட்டுள்ளது. அடுத்த கூடாரம் மையவாடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் ஜனாஸாக்களுடன் வருகைதரும் உறவினர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு மையவாடிக்குள் பாதுகாப்பு பிரிவினரின் உபயோகத்துக்கு விடப்பட்டுள்ளது. அடுத்த கூடாரம் மையவாடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் ஜனாஸாக்களுடன் வருகைதரும் உறவினர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்- Vidivelli