நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனடிப்படையில் மொனராகலை, களுத்துறை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி மொனராகலை மாவட்டத்தின் பிபில காவல்துறை பிரிவுக்குட்பட்ட கனுல்வெல, வரக்காபொல காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹல்லாவ கிராம சேவகர் பிரிவின் நியதுருபொல 1,2,3 மற்றும் 4 ஆகிய தோட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தெஹியோவிட்ட காவல்துறை பிரிவுக்குட்பட்ட கன்னகம கிராம சேவகர் பிரிவின் வெலகந்த வத்தை, கொடம்பல கிராம சேவகர் பிரிவின் கம்பேகம ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தின் எலதுவ கிராம சேவகர் பிரிவின் எலதுவ வத்தையும், காலி, எல்பிட்டி காவல்துறை பிரிவின் பழைய கொலனி கிராம சேவகர்கள் பிரிவிலுள்ள திவிதுர தோட்டமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை களுத்துறை, கம்பஹா, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(30) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மின்னேரித்தன்ன கிராம சேவகர் பிரிவு, கம்பஹாவின் சியம்பலாப்பே வத்தை - உப்புல்வசந்த வீதி, மாத்தளை - லக்கலை - கிருளுவீதிய மற்றும் குருவெல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட காவல்துறை பிரிவில் உள்ள டென்ஸ்வோர்த் தோட்டம் என்பனவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.