நாடு முழுதும், 48 பேர், ‘டெல்டா ப்ளஸ்’ வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக, இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,
கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. நாடு முழுதும், 75 மாவட்டங்களில், 10 சதவீதத்துக்கு அதிகமாகவும், 92 மாவட்டங்களில், 5 – 10 சதவீதத்துக்கு உள்ளும், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான டெல்டா ப்ளஸ், மஹாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பரவியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 48 பேர், டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், 20 பேர்; தமிழகத்தில், 9; மத்திய பிரதேசத்தில், 7; கேரளாவில், 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பஞ்சாப் மற்றும் குஜராத்தில் தலா இருவரும், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவரும், டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ் டிராவில் தலா ஒருவர், டெல்டா பிளஸ் வைரசுக்கு பலியாகி உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
– தமிழகத்தில் –
இதற்கிடையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:
டெல்டா ப்ளஸ் பரிசோதனை மையங்கள் நாடு முழுதும், 14 இடங்களில் மட்டுமே உள்ளன. அவையும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, சென்னையில், டெல்டா ப்ளஸ் தொற்றை கண்டறிவதற்கான ஆய்வகத்தை 2.5 கோடி ரூபாய் செலவில் அமைக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்; 25 நாட்களில் ஆய்வகம் பயன்பாட்டுக்கு வரும்.
தமிழகத்தில் இதுவரை 2,822 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு எந்த விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடர்பான, வழிகாட்டு நெறிமுறைகளை, டாக்டர் மோகன் தலைமையிலான 12 பேர் குழு, முதல்வரிடம் வழங்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தான், கறுப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆளாகின்றனர். மத்திய அரசிடமிருந்து, தமிழகத்திற்கு 1.41 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. தட்டுப்பாடு இல்லாமல், தடுப்பூசி போடப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மாறுபட்ட தகவல் ஏன்?
தமிழகத்தில், ‘டெல்டா பிளஸ்’ தொற்றால், ஒன்பது பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், தமிழக அமைச்சர் சுப்பிரமணியன், மூன்று பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த மாறுபட்ட தகவல் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில், 14 மரபணு ஆய்வு மையங்கள் உள்ளன. இவை அனைத்தும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநில அரசு, உருமாறிய வைரஸ் இருக்கிறதா என, ஆய்வு செய்ய எடுக்கும் மாதிரிகளை, மத்திய ஆய்வு நிறுவனங்களுக்குத் தான் அனுப்புகிறது.
ஆய்வு மையங்கள், பரிசோதனை முடிவுகளை முதலில் மத்திய அரசுக்கு தான் தெரிவிக்கின்றன. அதனால், உருமாறிய கொரோனா தொற்று எவ்வளவு; எந்தந்த மாநிலங்களில் பாதிப்பு என்பதை, மத்திய அரசு வெளியிடுகிறது.அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று முன்தினம் வரை வந்த தகவலின்படி, டெல்டா பிளஸ் தொற்றால், மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு நேற்று மாலை, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் ஒன்பது பேருக்கு பாதிப்பு என, தெரிவித்துள்ளது. அந்த ஒன்பது பேர் பட்டியல் கிடைத்த பின், எந்தெந்த மாவட்டங்கள் என்பது தெரிய வரும். அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கறுப்பு பூஞ்சை நோய் ஓரிரு வாரங்களில் ஒழியும்
தமிழகத்தில், கறுப்பு பூஞ்சை நோய் பரவலை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும், அரசுக்கு ஆலோசனை வழங்கவும், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தலைமையில், 13 பேர் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, நேற்று சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. பின், குழுவின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அளித்த பேட்டி:கறுப்பு பூஞ்சை நோயை ஒழிக்க, அறிவுரை வழங்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டது. முதல்வரை சந்தித்து, இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்டது.
ஆறு மண்டல மையங்கள்
மக்களிடம் விழிப்புணர்வு
ஓரிரு வாரங்களில், இந்நோயை முழுமையாக வெற்றி கொள்வோம் என்ற, நம்பிக்கை உள்ளது. மருந்துகளுக்கு முதலில் தட்டுப்பாடு இருந்தது. தற்போது, மாற்று மருந்துகள் உள்ளன. அதற்கு பலன் கிடைத்துள்ளது. கறுப்பு பூஞ்சை திரும்ப வர வாய்ப்புண்டு; வந்தாலும் சமாளிக்கும் திறன் உண்டு. மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது.கறுப்பு பூஞ்சை நோய் ஆரம்பித்த காலத்தில், நோய் முற்றிய நிலையில் வந்தனர். தற்போது, ஆரம்ப நிலையிலே வந்து விடுகின்றனர். இறப்பு குறைவதற்கு, இது முக்கிய காரணம்.
மக்கள் ஆரம்ப நிலையில் வருவதாலும், மருத்துவர்கள் குழுவாக இணைந்து, சிகிச்சை அளிப்பதாலும், இறப்பு குறைந்துள்ளது. கறுப்பு பூஞ்சை உருமாற்றம் அடையாது. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் போன்றோருக்கு, கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படுகிறது. தமிழகத்தில், 27 மாவட்டங்களில், கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களில், அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.