வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்தாண்டு மே மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் மினியாபோலிசில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞர் ஒரு கடையில் கள்ள நோட்டு கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. அதையடுத்து, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கைகளை பின்பக்கமாக கட்டி கீழே வீழ்த்தினர். அதில், ஒரு போலீஸ் அதிகாரி பிளாய்டின் கழுத்தின் மீது, தன் கால் முட்டிகளால் நெருக்கியுள்ளார். இதனால், மூச்சுவிட முடியாமல் பிளாய்டு உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி டெரக் சாவ்வின் உள்ளிட்டோர் பணி நீக்கம் செய்யப் பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, 12 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. கடந்த ஏப்ரலில் நடந்த விசாரணையின் போது டெரக் சாவ்வின் மீது, மூன்று விதமான கொலை குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு இருந்தது. அந்த மூன்றிலும் அவர் குற்றவாளி என்பதை அமர்வு உறுதி செய்தது.
இந்தவழக்கில் நேற்று தண்டனை விவரம் வெளியானது. இதில், டெரக் சாவ்விற்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை ஜார்ஜ் பிளாய்டு குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.