Our Feeds


Thursday, June 24, 2021

www.shortnews.lk

மணமகனுக்கு 20,000 ரூபா அபராதம் விதித்து எச்சரித்த மல்லாகம் நீதிமன்றம்!

 



(மயூரன்)


யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20,000 ரூபா தண்டம் விதித்துள்ளது.


யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி திருமண நிகழ்வு நடைபெற்றது.

அதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, அதிக எண்ணிக்கையானோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பில் சுகாதார பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மணமக்கள் குடும்பத்தினர் உட்பட திருமணத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தினர்.

இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்த 78 பேருக்கு கடந்த 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் சுகாதார பிரிவினரிடம் திருமணத்துக்கான அனுமதியை மணமகனே பெற்றிருந்தமையால், மணமகனை பிரதிவாதியாக குறிப்பிட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்றை (23) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மணமகன் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, மணமகனை நீதவான் கடுமையாக எச்சரித்து , 20,000 ரூபா தண்டம் விதித்தார்.

இதேவேளை மணமகனின் சகோதரர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் , சுகாதாரப் பிரிவினரின் அனுமதி இன்றி வெளிநாடு சென்றுள்ளார். அவர் தொடர்பிலான தகவல்களையும் சுகாதார பிரிவினருக்கு வழங்கி அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு நீதிவான் அறிவுறுத்தினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »