(எம்.எப்.எம்.பஸீர்)
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்க சிஐடி. தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
அதன்படி நாளை (23) முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு – கோட்டையில் உள்ள குற்றப் புலனயவுத் திணைக்கள தலைமையகத்தில் ஆஜராகுமாறு ஹரீன் பெர்ணான்டோ எம்.பி.க்கு சிஐடி அறிவித்துள்ளது.
சுகயீனம் காரணமாக ஹரீன் பெர்ணான்டோ, இன்று கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலையில் வைத்தே அவருக்கு இந்த அறிவித்தல் வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, ஹரீன் பெர்ணான்டோவிடம் விசேட வாக்குமூலம் ஒன்றைப் பெற வேண்டியுள்ளதாக கூறியே அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதேவேளை, நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதலிடையே, ஹரீன் பெர்ணான்டோ எம்.பி. தன்னை தாக்கியதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆரச்சி வெலிக்கடை பொலிஸில் முறையிட்டுள்ளார். இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மோதலினிடையே ஹரீன் பெர்ணான்டோ தன்னை தாக்கியதாக திஸ்ஸ குட்டி ஆரச்சி பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில், வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஹரீன் பெர்ணான்டோவிடம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.