அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் புரூக்ளின் சென்ரர் நகரில் கறுப்பின இளைஞர் ஒருவரை பொலிஸார் நேற்று சுட்டுக் கொன்றதையடுத்து ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
மினசோட்டா மாநிலத்திலுள்ள மினியாபொலிஸ் நகரில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளைட் பொலிஸ் அதிகாரி டெரெக் சாவினினால் முழங்காலால் மிதித்துக் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்காவிலும் ஏனைய பல நாடுகளிலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மினியாபொலிஸுக்கு அருகிலுள்ள புரூக்ளின் சென்ரர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 20 வயதான டான்ட்டே ரைட் எனும் கறுப்பின இளைஞர் சுடப்பட்டுள்ளார்.
இந்த இளைஞரின் தாயார் கேட் ரைட், இது தொடர்பாக கூறுகையில், தனது மகன் வாகனம் ஒன்றிலிருந்து பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக தொலைபேசி மூலம் தெரிவித்தார் என்றார். அதன்பின், தனது மகன் சுடப்பட்டுள்ளதாக மகனின் காதலி தனக்குத் தெரிவித்தார் எனவும் கேட் ரைட் கூறினார்.
இச்சம்பவத்தையடுத்து, ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
மேற்படி சம்பவம் தொடர்பாக புரூக்ளின் மத்தி பொலிஸார் விடுத்த அறிக்கையில், நபர் ஒருவர், போக்குவரத்து விதி மீறல் காரணமாக வாகனத்திலிருந்து இறக்கப்பட்டதாகவும், அவருக்கு எதிராக பிடி விறாந்து ஒன்று உள்ளதால் அவரை கைது செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
அச்சாரதி மீண்டும் காருக்குள் நுழைய முயன்றபோது, பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அது சாரதியைத் தாக்கியது. காரிலிருந்த பெண் பயணி ஒருவர், உயிருக்கு ஆபத்தில்லாத காயத்துக்குள்ளானார். அவர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மினேபொலிஸின் புறநகர் ஒன்றில் உள்ளூர் நேரப்படி திங்கள் காலை 6.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.