அரசாங்கம் எந்த அடிப்படையில் வஹாபிசம் என்ற விடயத்தை தீர்மானிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்படி, அதற்கான விளக்கத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வின் போதே முஜிபுர் ரஹ்மான் இந்தக் கேள்வியை முன்வைத்தார்
அண்மைக் காலங்களில் பல்வேறு தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் கைது செய்யப்பட்டு வருகின்றதை எமக்கு ஊடகங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. அடிப்படைவாதம் அல்லது வஹாபிசத்தை பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வஹாபிசம் என்ற விடயத்திற்கு ஏதேனும் வரையறைகள் அல்லது விளக்கங்கள் உள்ளதா? வஹாபிசத்தை கண்டு கொள்வதற்கு ஏதேனும் ஒரு முறைமை அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை முன்வைத்தார்.
இந்நிலையில், குறித்த கருத்துக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு பதில் வழங்கினார்.
"அது சாதாரண ஒரு விடயமாகும். ஐ.எஸ் என்பது. எண்ணக்கருவாகும். வஹாபிசம் என்றால் முஸ்லிம் மக்கள் மாத்திரமே இருக்க வேண்டும், முஸ்லிம் மதத்திற்கு எதிராக உள்ள அனைத்து விடயங்களையும் அழிக்க வேண்டும் என்பதே அதன் கருத்தாகும்.
வஹாபிசமும், ஐ.எஸ் அமைப்பும் ஒரு கொள்கை தான். 2104 ஆம் ஆண்டில் பக்தாதி என்பவராலே அது உருவாக்கப்பட்டது. முஸ்லிம் இனத்தவர்கள் அல்லது முஸ்லிம்களின் மதம் மாத்தரம் இருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.
இதன்படி அவ்வாறான கொள்கையில் இருப்பவர்கள் தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொள்வதோடு, அவர்களைக் கைது நாம் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்கின்றோம்" என்றார்.