(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
எந்ததொரு தடுப்பூசியை ஏற்றிக் கொண்டாலும் அதன் காரணமாக ஒரு சில பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண விடயமாகும். தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள் காரணமாக ஒரு இலட்சத்தில் ஒருவருக்கு தொண்டையில் கரகரப்பு ஏற்படுவதற்கு இடமிருப்பதுடன் எப்போதாவது மரண நிலைமையும் ஏற்படுவதற்கு இடமுள்ளது.. எமது நாட்டிலும் 6 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 3 பேர் மரணித்துள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் கேட்கப்பட்ட கொவிட் -19 தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் -19 தடுப்பூசியாக வழங்கப்படும் அஸ்ட்டரா செனிகா வழங்குவதை அரசாங்கம் நிறுத்தவில்லை. இதன் இரண்டாம் கட்டம் மே முதல் வாரத்தில் ஆரம்பமாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும்.
அதேபோன்று அஸ்ட்டரா செனிகா தடுப்பூசி மாத்திரமல்ல எந்ததொரு தடுப்பூசியை ஏற்றுக் கொண்டாலும் அதன் காரணமாக ஒருசில பாதிப்புகள் ஏற்படுவது சாதாரண விடயமாகும். தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள் காரணமாக ஒரு இலட்சத்தில் ஒருவருக்கு தொண்டையில் கரகரப்பு ஏற்படுவதற்கு இடமிருப்பதுடன் எப்போதாவது மரண நிலைமையும் உண்டாக இடமிருக்கின்றது.
அஸ்ட்டரா செனிகா தடுப்பூசி ஏற்றி சில வாரங்களுக்குள் இரத்தம் உறைதல் நோயாளர்கள் சில நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலும் அவ்வாறான 6 சந்தர்ப்பங்கள் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன் அவர்களில் மூவர் மரணித்துள்ளனர்.
இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி மற்றும் பக்கவிளைவு நோய்கள் தொடர்பான குழுவின் நிலைப்பாட்டின் பிரகாரம் இரத்தத்தில் உறைவுக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை என்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மில்லியனுக்கு 4 பேர் என்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் கொரோனா வைரஸுக்காக அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பும் அனுமதித்திருக்கிறது என்றார்.