இந்தியாவின், தெலங்கானாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்த இந்து மதத்தைச் சேர்ந்த நபர் ஒருவரைக் குடும்பத்தினர் கைவிட்ட நிலையில், இஸ்லாமிய இளைஞர்கள் இருவர் சேர்ந்து இந்து மத முறைப்படி சடங்குகள் செய்து உடலை தகனம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானா மாநிலம், கமரெட்டி மாவட்டம், கட்டேபல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மொகுலாயா. கட்டேபல்லி பகுதியில் கடைவைத்து வியாபாரம் செய்துவந்த மொகுலாயாவுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தொண்டைவலி ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து, அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்ட மொகுலாயாவுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து மொகுலாயா, பன்சுவாடாவிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
கடுமையான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மொகுலாயாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன், கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் ஆக்ஸிஜன் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளித்துவந்தும், உடலில் ஆக்ஸிஜன் அளவு 30 சதவிகித அளவுக்கும் குறைவாகச் சென்றதால் மொகுலாயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பன்சுவாடா அரசு மருத்துவமனை நிர்வாகம் மொகுலாயாவின் குடும்பத்தினருக்கு அவர் இறப்பு குறித்து தகவல் தெரிவித்திருக்கிறது. ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக மொகுலாயாவின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்திருக்கின்றனர்.
குடும்பத்தினர் உடலை வாங்க முன்வராததால், மருத்துவமனை ஊழியர்கள் உடலைப் பிணவறையில் வைத்துவிட்டு சென்றிருக்கின்றனர். இந்தநிலையில், கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் உடல்களை ஆம்புலன்ஸில் மயானத்துக்குக் கொண்டு செல்லும் சேவை புரிந்துவரும் இஸ்லாமிய இளைஞர்கள் இருவர், கொரோனாவால் உயிரிழந்த மொகுலாயாவின் உடலை அடக்கம் செய்ய முன்வந்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான இஸ்லாமியச் சகோதரர்கள் ஷபி, அலி ஆகியோர் மருத்துவமனை பிணவறையிலிருந்து மொகுலாயாவின் உடலை ஆம்புலன்ஸில் பன்சுவாடா பகுதியில் அமைந்துள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு மொகுலாயாவின் உடலுக்கு இந்து மத முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் முறையாகச் செய்து அவரது உடலை தகனம் செய்தனர்.