டெல்லி கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், மயானங்கள் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் புதைப்பதற்கு இடமில்லாமல் மக்கள் மத, சம்பிரதாய வழக்கங்களைத் துறந்துவிட்டு தகன மேடைகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர்.
கொரோனா நோய்த்தொற்றின் கோரத்தாண்டவத்தால் இந்தியா முன் எப்போதும் இல்லாத உயிர்ச்சேதங்களையும், பாதிப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பால் மத்திய, மாநில அரசுகள் திகைத்து நிற்கின்றன. முதலாம் அலையின் போது முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு உயிர்ச் சேதங்களைத் தடுத்த சுகாதாரத்துறையால், இந்த முறை அப்படி எதுவும் செய்ய திணறிக்கொண்டிருக்கிறது . பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் மூச்சு திணறித் துடித்துக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளை இடுகாட்டிற்கு வழிகாட்டி அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாகத் தலைநகர் டெல்லி, கொரோனாவின் பிடியில் சிக்கி நிலை குலைந்து நிற்கிறது. முதலாம் அலையில் பெரிதான உயிர்ச்சேதங்களைச் சந்திக்காத டெல்லி தற்போது பலத்த உயிர்ச் சேதங்களைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் மஹாராஷ்ட்ராவுக்கு, அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருப்பது டெல்லியில் தான். நாட்டில் பல பகுதிகளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிற கொரோனா நோயாளிகளுக்கு அளிப்பதற்கான ஆக்ஸிஜன் இருப்பு மிகக் குறைவாக இருப்பதால் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த அதிகரிக்கின்றன. அதிலும் குறிப்பாக, தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக ஆக்ஸிஜன் இருப்பு அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கிறது.
டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல், வெளியில் மூச்சை பிடித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளை வைத்துக்கொண்டு உறவினர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு ஆக்ஸிஜன் அளித்து உதவுமாறு மாநிலங்களைக் கைகூப்பிக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஒடிசா, ஹரியானா என பல்வேறு மாநிலங்கள் டெல்லிக்கு உதவ முன்வந்துள்ள போதிலும் டெல்லியின் மொத்த ஆக்சிஜன் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தினசரி 700 டன்னுக்கும் அதிகமாக டெல்லிக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.
பல இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்ஸிஜன் எப்போது வரும் என்று உயிரைப் பிடித்து கையில் வைத்துக்கொண்டு காத்துக்கிடக்கின்றனர். மறுபுறம், ஆயிரக்கணக்கில் மக்கள் தடுப்பூசி எப்போது வரும் என்று அச்சத்துடன் வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கின்றனர். தற்போதைய, நிலவரப்படி மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்புகள் பதிவாகிக் கொண்டிருப்பது தலைநகர் டெல்லியில் தான்.
நிலைமை கைமீறிச் சென்றுவிட்ட நிலையில், டெல்லியின் மயானங்கள் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் புதைப்பதற்கு இடமில்லாமல் மக்கள் மத, சம்பிரதாய வழக்கங்களைத் துறந்துவிட்டு தகன மேடைகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர்.
மயானங்களில் கூட்டம் மிகுதியாக உள்ளதாலும், இடப்பற்றாக்குறை நிலவுவதாலும், மக்கள் திறந்த மைதானங்களில் வைத்து கொரோனா நோயாளிகளின் உடல்களை எரியூட்டி வருகின்றனர்.
டெல்லியின் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் புகைப்படங்களும், மயானங்களில் இரவு பகலாக எரிந்து கொண்டிருக்கும் பிணங்களின் புகைப்படங்களும் காண்போர் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன.
இந்த கோரப் பிடியில் இருந்து நாட்டு மக்கள் விடுபட, மத்திய அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாநில அரசுகள் பகிரங்கமாக தங்கள் இயலாமையை தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் ஆக்ஸிஜன், ரெம்டிவிசிர் ஊசி, தடுப்பூசிகள் கிடைத்தாலே இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ உலகம் நம்புகிறது. மக்கள் தங்கள் பங்குக்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகிறது.