Our Feeds


Friday, April 23, 2021

www.shortnews.lk

ஹரின் கைது செய்யப்படுவாரா?- பாராளுமன்றத்தில் கடும் சர்ச்சை

 





எதிர்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கென அழைத்து அவரை கைதுசெய்ய அரசாங்கம் முற்படுவதாக எதிர்க்கட்சியினர் இன்று சபையில் கருத்துக்களை வெளியிட்டதால் ஆளும் - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


நாடாளுமன்றம் இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்து சபையில் கேள்வி எழுப்பினார்.

“இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஹரின் பெர்னாண்டோ ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல்வேறு காரணிகளை வெளிப்படுத்தினார். அவரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் பேசுவதற்காக எவ்வாறு அவரை கைது செய்ய முடியும். நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக வாதாடும் கருத்து தெரிவிக்கும் விடயத்தை குற்றமாக கருத முடியாது. மக்கள் பிரதிநிதியாக அவர் தனது கடமையை செய்துள்ளார். அதற்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்திருக்க எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும். தாக்குதலை நடத்தியவர்கள், அதற்கு திட்டமிட்டவர்களை கைது செய்யாது உண்மையை வெளிப்படுத்தும் நபர்களை எவ்வாறு கைது செய்ய முடியும்? என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகையில், ஹரின் பெர்னாண்டோ கூறிய சில காரணிகளுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என ஆளும் கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் குற்றப்புலனாய்வு பிரிவில் முறையிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் எக்கருத்தையும் பேச முடியும். அதேபோல் கருதினால் கூறியதை சற்று கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி கேற்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும் என அவர் கூறினார்.

ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி, ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய மாட்டோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உறுதியாக கூறுவார? நாடாளுமன்றத்தில் கூறும் காரணிகளுக்காக எமது உறுப்பினர்கள் ஒருசிலர் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கேட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய ஒரு விடயத்திற்காக அவரை அழைப்பதாக கூறுகின்றனர். இது நியாயமானதா? ;என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹகீம் எம்.பி, ஹரின் பெர்னாண்டோவின் உரையில், ஆணைக்குழுக்கு கொடுத்த வாக்குமூலம் அறிக்கையில் இல்லை என்பதாகும். எனவே 22 பகுதிகளை கொண்ட இந்த அறிக்கையில் இரண்டு அறிக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே முழுமையான அறிக்கையை நாடாளுமன்ற நூலகத்திற்கு வழங்க வேண்டும். இது முஸ்லிம் சமூகத்திற்கும் மிக முக்கியமான ஒன்றாகும் என்றார்.

சபை முதல்வர், ஆளுங்கட்சி பிரதம கொறடா மற்றும் ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ ஆகியோர் அரச தரப்பில் ஆளும் தரப்பில் பதிலளித்ததுடன் ஆளும் எதிர் தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் நீண்ட நேர கருத்து மோதல் ஏற்பட்டது.

ஆளும் கட்சி சார்பில் பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் :- நாடாளுமன்றத்தில் அவர் கூறிய விடயங்களுக்காக அவரை கைது செய்ய நாம் இடமளிக்க மாட்டோம். அதற்கு அனுமதி இல்லை என்பதும் எமக்கு தெரியும், ஆனால் சிறப்புரிமையை பயன்படுத்திக்கொண்டு பொய்களை கூறக்கூடாது.

நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு அமைய பேசிய விடயங்களுக்காக யாரையும் கைது செய்ய இடமளிக்க மாட்டோம். அரசாங்கமாக இந்த நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். உண்மைகள் தெரியும் என்றால் சபைக்குள் கூறிக்கொண்டு இருக்காது உங்களுக்கு தெரிந்த காரணிகளை உரிய இடத்தில் முறையிட வேண்டும். உண்மைகளை கண்டறிய வேண்டும், குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றால் தெரிந்த உண்மைகளை பொலிசாருக்கு கூற வேண்டும். நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்களுக்காக ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வதாக யார் கூறியது? அவ்வாறான எந்தவொரு முயற்சியும் இல்லை. அவரை கைதுசெய்ய அரசாங்கம் எப்போதும் கூறவும் இல்லை என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கத்தோலிக்க மக்கள் மத்தியில் அச்சமொன்ரை உருவாக்கி வருகின்றனர். ஹரின் பெர்னாண்டோ மட்டுமல்ல அனுரகுமாரவின் கட்சியில் இப்ராஹீம் உள்வாங்கப்பட்டமையும் பிரச்சினையாக உள்ளது. எனவே இது குறித்தும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறையிட வேண்டியுள்ளது. எனவே இப்போது ஒரு முறைப்பாடு மட்டுமே செய்துள்ளோம், இன்னும் பல முறைப்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது என்றார்.

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன கருத்து வெளியிடுகையில், அனாவசிய குழப்பங்களை ஏற்படுத்தி காலத்தை கடத்த வேண்டாம், ஒரு நிமிடத்திற்கு ஒரு இலட்சம் செலவாகின்றது அதனை நாசமாக்க வேண்டாம் என்றார்.

இதனை அடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு சபை நடுவே வர முற்பட்ட வேளையில் சபாநாயகர் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவிற்கு எச்சரிக்கை விடுத்து ஆசனத்தில் அமருமாறு இரண்டு மூன்று தடவைகள் வலியுறுத்தினார். என்றாலும் ஆளும் எதிர் கட்சிகள் சபையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »