இலங்கையில் தற்போது பரவிவரும் கொவிட் வைரஸ் தொற்றானது, காற்றிலும் பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் கலாநிதி நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் தனது முகக் கவசத்தை கழற்றி, சிறிது நேரம் ஒரு இடத்திலிருந்து, அந்த இடத்தை விட்டு வெளியேறியதன் பின்னரும், அவர் இருந்த இடத்தில் அதே வைரஸ் காற்றில் கலந்திருக்கும் என அவர் கூறுகின்றார்.
குறித்த நபர் அந்த இடத்தை விட்டு வெளியேறியதன் பின்னர், கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகாத ஒருவர் அந்த இடத்திற்கு வருகைத் தந்து, தனது முகக் கவசத்தை கழற்றியவுடன், காற்றில் கலந்திருக்கும் குறித்த வைரஸ், குறித்த நபரின் உடலுக்குள் சென்று விடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
அதனால், முகக் கவசம் முறையாக அணிவது கட்டாயமானது எனவும் விசேட வைத்தியர் கலாநிதி நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.
சிலர் வீதிகளில் செல்லும் போது, முகக் கவசத்தை அணிந்திருப்பதாகவும், ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்றதன் பின்னர், அவர்கள் முகக் கவசத்தை கழற்றிவிடுவதாகவும் அவர் கூறுகின்றார்.
அது மிகவும் ஆபத்தானது என கூறும் அவர், எந்நேரமும் முகக் கவசத்தை அணிந்திருப்பது கட்டாயமானது எனவும் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, ஆள் நடமாட்டம் அதிகளவில் உள்ள பகுதிகளில், காற்றில் இந்த வைரஸ் அதிகளவில் பரவியிருக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.