இனவாத அமைப்புகளையும் தடை செய்யுமாறு பரிந்துரை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை தடை செய்யாது இஸ்லாமிய அமைப்புகளை மாத்திரம் தடை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் ஐ.எஸ், அல்காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் 6 தவ்ஹீத் பிரச்சார அமைப்புகளும் தடை செய்ய சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளமை குறித்து முஜிபுர் ரஹ்மான் MP, BBC உலக சேவைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
எனினும், இனவாத கொள்கைகளை கொண்ட பெரும்பான்மை சிங்கள அமைப்புக்களும் இந்த பட்டியலில் காணப்பட்ட போதிலும், அந்த இனவாத அமைப்புகளை தடை செய்யாது, இஸ்லாமிய அமைப்புகளை மாத்திரம் தடை செய்வதானது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறுகின்றார்.
இந்த நடவடிக்கையின் ஊடாக, சட்டத்தில் பிரச்னை உள்ளமை தெளிவாகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நாட்டிலுள்ள சட்டம் சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு விதமாகவும், பெரும்பான்மை மக்களுக்கு வேறொரு விதமாகவும் செயற்படுகின்றது என்பது இதனூடாக உறுதிப்படுத்தப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.
இந்த நடவடிக்கையானது, அநீதியான நடவடிக்கை என்பதுடன், எதிர்காலத்தில் இதனூடாக பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிறுபான்மை சமூகத்தின் பிரசன்னம் கிடையாது என கூறிய அவர், அதனால், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எந்தளவிற்கு நியாயமானது என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மை சமூகத்தை வைத்து கொண்டு, அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஊடாக, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை பேசுவதாகவும் முஜுபூர் ரஹுமான் தெரிவிக்கின்றார்.
இந்த பெரும்பான்மை சிங்கள அதிகாரிகளுக்கு, இஸ்லாமிய கொள்கைகள் எவ்வாறு தெரியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
வெள்ளைகாரர்கள், இலங்கை தொடர்பில் தீர்மானங்களை எடுத்ததை போன்றே, தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் குறிப்பிடுகின்றார்.