(எச்.எம்.எம்.பர்ஸான்)
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எமது பிரதேசத்தில் இருந்த ஒரு சில அரசியல் ஊழியர்கள் கல்குடாவுக்கு அநியாயம் செய்து விட்டார்கள் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி – மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரிடம் மின் விளக்குகள் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், சில படித்தவர்கள் இந்த கல்குடா அரசியலுக்கு துரோகம் இழைத்தவர்களில் முதன்மை இடத்தைப் பெறுகிறார்கள்.
தாம் சமூகத்தில் எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்று தெரியாமல் அவர்கள் இரவு நேரங்களில் அரிசி பேக்குகளை மக்களிடம் கொடுத்து இவ்வாறான துரோக அரசியலை செய்துள்ளனர்.
இவ்வாறு அரசியலைக் காசாக்கிப் போனதன் பலன்தான் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட விவகாரம். இந்த நாடு முஸ்லிம்களைப் போட்டு சின்னாபின்னமாக்கியது. இந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை கேவலப்படுத்துகிறது. இதற்கெல்லாம் யார், யார் அரிசி பேக்குகள் தூக்கிக் கொடுத்தார்களோ, காசி வாங்கிக் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியேயாக வேண்டும்.
இந்தப் பிரதேசத்தில் நாங்கள் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை செய்துள்ளோம். கடந்த காலங்களில் அரசாங்கம் எங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து கல்விக்காக நிறைய செலவு செய்துள்ளோம். சுமார் 80 சத வீதமளவில் நாங்கள் பாடசாலைகளுக்கு கட்டடங்கள் அமைத்துள்ளோம். அதேபோன்று இன்னும் பல அபிவிருத்திகளை நாங்கள் செய்துள்ளோம்.
இவ்வாறான வேலைகளை செய்த எங்களுக்குக அவர் என்ன செய்தார், பெரிதாக என்ன கிழித்துள்ளார் என்ற ஏச்சும், பேச்சும்தான்.
இன்று நமது மக்கள் 10 கிலோ அரிசிக்கும் 2000 ரூபா காசிக்கும் தங்களின் வாக்குகளை விற்றுவிட்டனர். அவர்கள் உங்களுக்குத் தந்த பணமும், அரிசியும் உங்களிடம் இப்போதும் உள்ளனவா? அதனால் உங்களது பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா? என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இனி அடுத்த தேர்தல் ஒன்று வரும்போதுதான் அவர்கள் வந்து உங்களுக்கு அரிசியும், பணமும் தருவார்கள். இப்போதைக்கு அவர்கள் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தேர்தல் ஒன்று வரும்போது அதெற்கென்று டீல் மாஸ்டர்கள் கொஞ்சப் பேர் நமது பிரதேசத்திலிருந்து வருவார்கள் அவர்கள் வந்து அரிசி பேக்குகளை தூக்கிக் கொண்டு அலைந்து திரிவார்கள். நீங்கள் சிந்திக்காத வரைக்கும் உங்களை அவர்கள் இவ்வாறுதான் வழி நடாத்துவார்கள் என்றார்.
இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், சபை உறுப்பினர்கள், மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.