இலங்கையிலுள்ள 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கான அனுமதியை சட்ட மா அதிபர் வழங்கியுள்ள நிலையில், தடை விதிக்கப்படவுள்ள அமைப்புக்களில் ஒன்றான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், இந்த முடிவு குறித்து தமது கண்டனத்தை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மேலும் பல வருடங்களுக்கு முன்னரே தமது அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்கள் செய்த செயலுக்காக, தமது இயக்கம் எவ்வாறு பொறுப்பாகப்பட முடியும் எனவும் அந்த அமைப்பு கேள்வியெழுப்பிலுள்ளது.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பதில் தலைவர் எம்.ஏ. அம்ஜத்கான் கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
‘ஈஸ்டர் தின தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவ்வித அடிப்படைகளோ எத்தகைய ஆதாரங்களோ இன்றி எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் எமது இயக்கத்தைத் தடை செய்வதற்கு சட்டமா அதிபர் அங்கீகாரம் அளித்துள்ளதையும் நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எவ்வித நியாயமான ஆதாரங்களுமின்றி எமது இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமென அடையாளப்படுத்தி இருப்பதையிட்டு நாம் விசனமடைகிறோம்.
எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நாம் ஒரு தடவையேனும் அழைக்கப்படவில்லை. இது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதியின் நியமங்களுக்கு முரணானதாகும்.
பிரதான நீரோட்டத்தில் நின்று வெளிப்படையாக இயங்கிய, மாசற்ற வரலாற்றைக் கொண்ட இளைஞர் இயக்கம் என்ற வகையில் எமது இயக்கத்தைத் தடைசெய்ய எதேச்சதிகாரமாக அங்கீகாரமளிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம்.
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தின தாக்குதலுடனோ அல்லது வேறு எந்த பயங்கரவாத சம்பவங்களுடனோ எமது அமைப்புக்கு அற்ப அளவிலான சம்பந்தமும் கிடையாது.
விசாரணை ஆணைக்குழுவோ அல்லது கௌரவ சட்டமா அதிபரோ எம்மை ஏன் அழைத்து விசாரித்திருக்கக் கூடாது?
எமது அமைப்பிலிருந்து ஏற்கனவே விலக்கப்பட்ட சிலர் மாவனல்லை புத்தர் சிலை தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றமைதான் அதற்கான ஒரே காரணம் என எமக்குத் தோன்றுகிறது.
பொறுப்பற்ற சிலரால் மேற்கொள்ளப்பட்ட இந்த இழிசெயலையும் 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தின தாக்குதலையும் நாம் ஏற்கனவே வன்மையாக கண்டித்திருக்கிறோம்.
இத்தகைய சிலர் பல வருடங்களுக்கு முன்னரே எமது அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டமை, பிழையான போக்கு ஒன்றை எமது இயக்கம் கிஞ்சித்தும் சகித்துக் கொள்ள மாட்டாது என்பதற்கான சிறந்த சான்றாகும்.
பல வருடங்களுக்கு முன்னரே எமது அமைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்கள் செய்த செயலுக்காக இயக்கம் எவ்வாறு பொறுப்பாகப்பட முடியும்? அதேபோன்று புத்தர் சிலை தாக்குதல் விவகாரம் தொடர்பில் இதுவரை எவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை என்பதும் நோக்கத்தக்கதாகும்.
எமது அமைப்பைத் தடை செய்வதற்கான முன்மொழிவை நாம் கண்டிக்கிறோம். அதனை இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே நாம் கருதுகிறோம்.
எமது இயக்கத்தைப் பலவந்தமாக தடைசெய்ய எடுக்கும் முயற்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாம் எமது சட்டத்தரணிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். எமது அமைப்பு தடை செய்யப்பட்டால் நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை எமது சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கும் நாம் தீர்மானித்துள்ளோம்.
இயக்கம் தடை செய்யப்படும் வேளையில் எமது அர்ப்பணிப்புள்ள அங்கத்தவர்களை அமைதியாக இருக்குமாறும் அமைப்பின் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்திக் கொள்ளுமாறும் நாம் வேண்டுகிறோம்.
எமது நீதித்துறை நியாயம் வழங்கும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்குண்டு’.