Our Feeds


Sunday, April 18, 2021

www.shortnews.lk

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - பினங்களை எரிக்க இடமின்றி தடுமாறும் மக்கள் - பெரும் சிக்களில் மோடி அரசு

 



இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.


ஆனால் மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதுமட்டுமல்லாது பா.ஜ.க அரசு ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதில் அம்மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா தடுப்பு கட்டமைப்பு படுமோசமாக இருந்துவருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.கவினர் பலரும், ‘குஜராத் மாடல்’ போல மற்ற மாநிலங்களை மாற்றுவதாக கூறிவருகின்றனர்.

ஆனால் உண்மையில், குஜராத் மக்கள் பெரும் துயரத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகி வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத் அரசின் மோசமான செயல்பாட்டை பொறுக்கமுடியாமல் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், குஜராத் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு முடிவு வருவதற்கு ஏன் 3 முதல் 5 நாட்கள் ஆகின்றன? தொற்று குறைவான நாட்களிலேயே ஏன் பரிசோதனை மையங்களை அதிகரிக்கவில்லை? நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் போதிய அளவில் இல்லாததற்கு என்ன காரணம்? உள்ளிட்ட அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

அந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லாமல் அவகாசம் கேட்கும் லட்சணத்தில் தான் குஜராத் அரசு உள்ளது. அங்குள்ள மக்களுக்கு தற்போதுவரை மருத்துவ வசதிகளோ, சுகாதார நடவடிக்கையோ எதுவும் சென்றடையாமல் பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர் அம்மாநில மக்கள். குறிப்பாக உயிரிழந்த கொரோனா நோயாளிகளை சுகாதாரமான முறையில் எரிப்பதற்குக் கூட அங்கே வழியில்லை.

கொரோனாவால் இறந்தவர்களை அரசு சார்பில் எரியூட்ட உறவினர்கள் நாள்கணக்கில் காத்துக்கிடக்கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொறுமையிழந்த உறவினர்கள் சுடுகாட்டிலும், சாலைகளுக்கு அருகில் உள்ள காலி இடங்களில் அதுவும் திறந்தவெளியில் உடலை எரியூட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்த பின்னரும் 8 முதல் 24 மணிநேரம் வரை உடல்கள் தரப்படுவதில்லை என உறவினர்கள் புகார் கூறுகின்றனர். ஒரு காணொளியில் தனது உறவினரின் உடல் மூன்று நாட்களாக தரப்படவில்லை என ஒருவர் கதறுகிறார். உடல் கிடைத்த பின்னர் எரியூட்டுவதற்கு மேலும் பல மணிநேரம் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது என உறவினர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

ஒருபக்கம் உறவினர்கள் கதறல் என்றால் மறுபக்கம் சுடுகாடு ஊழியர்களின் கதறல், நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட உடல்கள் வருகின்றனர். ஆனால் சூரத் நகரில் மொத்தமாக மூன்று மின் தகன மையங்கள் மட்டுமே உள்ளன. இதனால் கொரோனா மரணங்கள் எவை ஏனைய மரணங்கள் எவை என வகைப்படுத்தக்கூட முடியவில்லை.

இதனிடையே தகனத்தில் எரியூட்டும் அடுப்பில் தினமும் பிரச்னைகள் எழுவதாகவும், சில இடங்களில் அடுப்பில் உள்ள இரும்பு பாளங்கள் தொடர் எரியூட்டல் காரணமாக உருகி செயல்படாமல் உள்ளன எனவும் ஊழியர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். சூரத் நகரம் மட்டுமின்றி அகமதாபாத் நகரிலும் இதே நிலைமைதான் நீடிப்பதாக அங்குள்ள ஊழியர்கள் தெரிவிகின்றனர்.

ஊழியர்களின் கணக்குப்படி நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட மரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் குஜராத் பா.ஜ.க அரசாங்கமோ 40 முதல் 50 வரைதான் உயிரிழப்புகள் என கணக்கு சொல்கிறது. மக்களுக்கு தேவையான மருத்துவக் கட்டமைப்பு, சுகாதாரத்துறையின் கட்டமைப்புகள் என எந்த வளர்ச்சியுமே காணாத இதே குஜராத்தில் தான் பல கோடி ரூபாய் செலவு செய்து வானுயர்ந்த சிலையும், மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

kalaignarseithigal

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »