உ.பி. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட டாக்டர் கஃபீல்கான், `கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு, யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற ஐந்து மாதங்களில் கோரக்பூரிலுள்ள பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இதில் ஒரே நாள் இரவில் 23 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று கூறி குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல்கான் உட்பட ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் கஃபீல் கான் கைதுசெய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றியதாக கஃபீல் கானை அனைவரும் பாராட்டினர். ஆனால் பின்னர் குழந்தைகள் இறப்புக்கு கஃபீல் கான்தான் காரணம் என்று கூறி அவரை உ.பி அரசு கைதுசெய்தது. அவர்களில் கஃபீல் கான் தவிர மற்ற அனைவரும் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் சேர்க்கப்பட்டனர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கஃபீல் கான் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாமல் இருந்தார். சுப்ரீம் கோர்ட் தலையிட்ட பிறகே விடுதலை செய்யப்பட்டார். ஆனால், பணியில் மட்டும் இன்னும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையே, தேசிய குடியுரிமைச்சட்டம் குறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேசியதற்காக கஃபீல் கான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். அதன் பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றம் கஃபீல் கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்துசெய்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் கஃபீல் கான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `2017-ம் ஆண்டே ஆக்ஸிஜன் கொள்முதலிலுள்ள சிக்கல் மற்றும் பற்றாக்குறை குறித்தும், சிறந்த மருத்துவக் கொள்கை உருவாக்குவது அவசியம் என்றும் வலியுறுத்தினேன்.
இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் நான் சிறையில் அடைக்கப்பட்டேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கஃபீல் கான் மீது மொத்தம் ஒன்பது விசாரணைகள் நடந்தன. இவற்றில் எதிலும் அவர் குற்றவாளி என்று முடிவாகவில்லை. எனவே, அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளும்படி அகில இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் உத்தரப்பிரதேச அரசுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. டாக்டர் கஃபீல் கானுடன் சேர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டிருப்பதையும் அந்த சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்தநிலையில் டாக்டர் கஃபீல் கான் `என்னை மீண்டும் பணியில் சேர்த்து, கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு அவசர சிகிச்சை பிரிவில் 15 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. அந்த அனுபவத்தைக்கொண்டு பலரது உயிரைக் காப்பாற்ற முடியும். கொரோனா சரியான பிறகு வேண்டுமானால் மீண்டும் என்னை சஸ்பெண்ட் செய்துவிடுங்கள்’ என்று உத்தரப்பிரதேச முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் அலுவலகம், `முறைப்படி கஃபீல் கான், அரசு இணையத்தில் விண்ணப்பிக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய மெடிக்கல் அசோசியேஷனும் கஃபீல் கான் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. கஃபீல் கான் இது குறித்து அளித்த பேட்டியில், ``நாடு தற்போது கடுமையான சவாலை எதிர்நோக்கியுள்ளது. கொரோனா காலத்தில் கடந்த ஒரு ஆண்டில் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் இறந்துவிட்டனர். உத்தரப்பிரதேச சுகாதார சிஸ்டம் மிகவும் மோசமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.