Our Feeds


Tuesday, April 20, 2021

www.shortnews.lk

தடை செய்யப்பட்ட தௌஹீத் அமைப்புகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அமைப்புகளாக செயல்படவில்லை - பாராளுமன்றில் ஹரீஸ்

 



(சர்ஜுன் லாபீர்)


தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் மார்க்க ரீதியான கொள்கைகளை பின்பற்றுகின்ற அமைப்புகளாக செயற்பட்டார்களே ஒழிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற அமைப்புக்களாக ஒரு போதும் செயற்படவில்லை. என திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்..


எமது நாட்டில் ஈஸ்டர் குண்டு வெடிப்பின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் நாளை 21ம் திகதி அனுஸ்டிக்கப்பட இருக்கின்ற சூழ்நிலையில் நாட்டில் வாழ்கின்ற சகல சமூகங்களும் பாதுகாப்பாகவும், ஒன்றுமையாகவும் வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் ஒவ்வொருவருடைய அவாவாகவும், நோக்கமாகவும் இருக்கின்றது. 


சஹ்ரானுடைய பாசிச மனநோய் கொண்ட பைத்தியட்காரன் என்று சொல்லும் அவனும் அவனுடைய கும்பலும் செய்த நாசகார செயலினால் இந்த நாட்டில் 300ற்கு மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பழியானார்கள். அந்த மக்களுக்காக நாங்கள் இப்போதும் அனுதாபம் தெரிவிக்கின்ற அதே சூழ்நிலையில் இதற்கு பின்னனியாக இருந்து செயற்பட்ட சக்திகள் உண்மையில் இன்னும் வெளியே கொண்டுவரப்படவில்லை. 


இதைத்தான் இன்று எல்லோரும் பேசுகின்றார்கள் மரியாதைக்குரிய கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் கூட நேற்று முன்தினம் ஒரு அறிக்கையும், நேற்று ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருக்கின்றார். அதில் வெளிநாட்டு சக்தியின் தேவைக்காக இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் செயற்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒரு கூற்று கூறப்பட்டு இருக்கின்றது. அவர் ஒரு சாதாரண நபர் அல்ல கிறிஸ்த சமூகத்தின் தலைவராக இருக்கின்ற ஒருவர் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை கூறுகின்ற போதும் அதே நேரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இது சம்மந்தமான பல்வேறு விடயங்கள் வெளியே கொண்டுவரப்பட்டு இருக்கின்ற ஒரு சூழ்நிலையில் இது விடயமாக உரிய விசாரணைகளை நடாத்தி இதற்கான காரண பின்னனியாக உள்ள சக்திகள் வெளியே கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.


அவ்வாறு இல்லாமல் இந்த நாட்டில் வாழ்கின்ற 20 இலட்சம் முஸ்லிம் சமூகத்தில் இது தொடர்பான தொடர் அழுத்தங்களும், தொடர் கைதுகளும், விசாரனைகளும், பல நடவடிக்கைகளும் முஸ்லிம் சமூகத்தை தொடர்ச்சியாக பீதியில் வாழ்கின்ற ஒரு சமூகமாக இன்று மாற்றப்பட்டு இருக்கின்றது. 


குறிப்பாக பெளத்த, தமிழ் மற்றும் கிறித்தவ சமூகங்களில் பல்வேறு மதப் பிரிவுகளும், கொள்கைகளும், ஜாதிப் பிரிவுகளும் காணப்படுகின்றன. அவ்வாறு தான் முஸ்லிம் சமூகத்திலும் மதக் கொள்கைகள் பல இருந்து கொண்டு இருக்கின்றது. அந்த கொள்கைகள் இன்று பயங்கரவாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


எமது நாட்டில் பாரம்பரியமாக முஸ்லிம் சமூகம் சுன்னத்வல் ஜமாஅத் என்ற கொள்கையை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் மத்திய கிழக்கில் செல்வாக்கு பெற்ற அதனோடு சம்மந்தப்பட்ட தெளஹீத் பிரிவுக் கொள்கையினை பின்பற்றுகின்ற பல்வேறு மார்க்க அமைப்புக்களும் இந்த நாட்டில் செயற்பட்டு வந்தன. அவர்கள் மார்க்க ரீதியாக கொள்கைகளை பின்பற்றுகின்ற ஒரு அமைப்பாக செயற்பட்டார்களே ஒழிய அவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற, பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பு செய்கின்ற அமைப்புக்களாக ஒரு போதும் செயற்படவில்லை.

எனினும் எவ்வித விசாரனைகளும் இன்றி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 11 அமைப்புக்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் சில அமைப்புகள் மிக பாரம்பரியமாக 70 ஆண்டுகளாக இந்த நாட்டில் அரபு கல்லூரிகளை நிருவகித்ததோடு பல ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தல், வீடுகளை கட்டிக் கொடுத்தல், கல்விக்காக உதவி செய்தல் போன்ற அளப்பரிய சேவைகளையே இவ் அமைப்புகள் செய்து கொண்டு இருந்தது. இந்த அமைப்புகள் எந்தவித விசாரனைகளும் இன்றி தடை செய்யப்பட்டு இன்று பல நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களும் மூடப்பட்டு இருகின்றன.


ஒரு முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் மிகவும் கவலையடைகின்றேன். இந்த விடயம் சம்மந்தமாக குறைந்தபட்சம் ஆளும் தரப்போடு தொடர்புடைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையாவது அரசின் தலைவர்கள் அழைத்து இதில் உள்ள விடயங்களை பேசி இந்த அமைப்புகளுடைய தடைகளை நீக்குவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


அதேநேரம் நேற்று பாதர் சிரீல் காமினி அவர்கள் 350 இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்த நாட்டில் நடமாடுகின்றார்கள் என்ற பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது ஒரு பீதியை கிளப்புகின்ற நடவடிக்கையாகும். இது சம்மந்தமாக அரசின் புலனாய்வுப் பிரிவு உடனடியாக அவரை விசாரனை செய்து இது தொடர்பான உண்மைத்தன்மையினை வெளிக்கொண்டு வந்து முஸ்லிம் சமூகத்தை நிம்மதியாக இந்த புனித ரமழான் மாதத்தில் வாழ வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கேட்டு கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »