ஈரானின் நாதன்ஸ் நகரிலுள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவமொன்றையடுத்து ஈரான் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து அணு ஆலையின் மின் விநியோகம் தடைபட்டது. இது இஸ்ரேலின் இணையவழித் தாக்குதலின் விளைவு என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
அணு ஆலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த சம்பவத்தால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரானின் சிவிலியன் அணுசக்தி திட்டத்தின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வெண்டி தெரிவித்திருந்தார். பாரிய சேதம் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்டும் புதிய மேம்பட்ட ஐ.ஆர்.6 ரக மையவிலக்குகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் சனிக்கிழமை அறிவித்தது. அதற்கு மறுநாள் அந்த ஆலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் அணுசக்தி ஸ்தாபனத்தின் தலைவர் அலி அக்பர் சாலேஹ் இது தொடர்பாக கூறுகையில், மேற்படி தாக்குதல் ஒரு பயனற்ற செயற்பாடு என விமர்சித்ததுடன், இந்த அணுசக்தி எதிர்ப்பு பயங்கரவாதத்தை சர்வதேச சமூகம் எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் கைத்தொழில் மற்றும் அரசியல் முன்னேற்றத்தை எதிர்க்கும், வெற்றிகரமான அணுசக்திதுறை அபிவிருத்தியை தடுக்க முற்படுபவர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் ; அலி அக்பர் சாலேஹ் கூறினார். ஆனால், தாக்குதலின் பின்னாலுள்ள நாடு அல்லது அமைப்பு குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
ஆனால், இது இது இஸ்ரேலின் இணையவழித் தாக்குதல் என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து இஸ்ரேலிய அரசு நேரடியாக எதுவும் கூறவில்லை.
இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு
இந்நிலையில், இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சு இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீத் கதிப்ஸாதேஸ், இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக கூறுகையில், ஸியோனிஸ ஆட்சி இந்நடவடிக்கையின் பின்னால் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015-ம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
அதுமட்டும் இன்றி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.
அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி தடை விதிக்கப்பட்ட போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது.
மேலும் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் யுரேனியம் செறிவூட்டும் புதிய ஆலையை ஈரான் கட்டியது. ஈரான் இந்தப் புதிய ஆலையை கட்டுவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனிடையே அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இரு நாடுகளுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ள நிலையில் ‘இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.