Our Feeds


Sunday, April 25, 2021

www.shortnews.lk

பயணத்தில் வாகனத்திற்குள்ளும் முகக்கவசம் அணியுங்கள் - தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 19 பேர் கைது!

 



(செ.தேன்மொழி)


தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்குப் புறம்பாக செயற்பட்டமை தொடர்பில் இன்று (25) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,கொவிட்-19 வைரஸ் பரவல் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில், புதிய கொத்தணிகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. மக்கள் முறையாக சுகாதார சட்டவிதிகளை கடைப்பிடிக்காததன் காரணமாகவே இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதனால் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடுமையாக செயற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிபத்கொட மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளிலேயே சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட 3,470 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெருவதற்காக முகக்கவசம் அணிவதே சிறந்தது. அதனால், வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிப்பவர்கள் அந்த வாகனத்துக்குள் இருக்கும்போது முகக்கவசத்தை அகற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதே போன்று ஏனைய வாகனங்களில் பயணிப்பவர்களும் முகக்கவசங்களை அகற்றக் கூடாது.

இதேவேளை, நிகழ்வுகள் ,விழாக்கள் என்பவற்றை ஏற்பாடு செய்யும் போது சுகாதார பிரிவினரின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்வாறு அனுமதி பெற்றுக் கொள்ளாமல் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது சிவில் உடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »