ஒரு விபத்தில் மூளை செயலிழந்த 19 வயது இளைஞன் தாம் உயிரிழக்கும் நேரத்தில் மூன்று உயிர்களை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞனின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இறப்புக்கு அருகிலுள்ள மூன்று நோயாளிகளை காப்பாற்றியுள்ளது.
அந்த வகையில் நேற்று மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், இரண்டு சிறுநீரக மாற்று சிகிச்சைகள் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் மேற்கொள்ளப்பட்டன.
மாவநெல்ல பகுதியில் வசிக்கும் பசிந்து கிம்ஹன் ரத்நாயக்க என்ற 19 வயது இளைஞரிடமிருந்து இந்த உறுப்புகள் பெறப்பட்டுள்ளன.
மாவநெல்ல – ஹெம்மாத்தகமவில் வசிக்கும் இந்த இளைஞன், தனது தாய், சகோதரி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 16 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டி வேனில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இயந்திரங்கள் மூலம் இயக்கப்படும் போது அந்த இளைஞனின் மூளை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.
இதை அடுத்து, அவரது கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்களை தானம் கொடுத்து மூன்று உயிர்களை காப்பாற்ற தாய் ஒப்புக் கொண்டார்.
அதன்படி, இளைஞனின் கல்லீரல் கொழும்பு வைத்தியசாலைக்கும், சிறுநீரகங்கள் கண்டி மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கும் கொண்டுசெல்லப்பட்டன.
சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பி.ஆர். ஹரிச்சந்திர கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் 33 வயதான நபருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை நிபுணர்களான ருவன் திசாநாயக்க மற்றும் ரோஹன் சிறிசேனா ஆகியோர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையையும், டாக்டர் அவந்தா மாரசிங்க அனுராதபுரம் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்தமை குறிப்பிடத்தக்கது