Our Feeds


Tuesday, December 1, 2020

www.shortnews.lk

கொரோனா ஜனாஸா அடக்கத்திற்கு தொழில்நுட்ப குழு அனுமதி வழங்குமென்ற நம்பிக்கை எமக்கில்லை. - ஹலீம் MP கவலை

 



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம்களின் சடங்களை அடக்கம் செய்வதற்கு தொழில்நுட்ப குழு அனுமதி வழங்குமென்ற நம்பிக்கை எமக்கில்லை. அதனால் அரசாங்கம் முஸ்லிம்களின் கலாசாரத்துக்கு மதிப்பளித்து சாதகமான முடிவொன்றை எடுக்கமென நம்புகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எச்.எம்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில்  சுகாதார அமைச்சு மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. உயிரிழப்புகளும் நூறு பேரை கடந்துள்ளது. கொவிட் ஒழிப்புக்காக சுகாதாரத்துறையினரும் பாதுகாப்பு படையினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். என்றாலும் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்டத்தில் ஒரே ஒரு பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் மாத்திரமே உள்ளது. முழு கண்டி மாவட்டத்திற்கு ஒரு இயந்திரம் போதாது. இதுதொடர்பில் சுகாதார அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் கொவிட் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடங்கள் எரிக்கப்படுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் உள்ளன. இந்தப் பிரச்சினை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. தொழில்நுட்ப குழுவின் அறிவிப்பு கிடைக்கும்வரை காத்திருப்பதாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் கூறுகிறது. தொழில்நுட்ப குழு மாறுபட்ட நிலைபாட்டை கொண்டிருப்பதால் அக்குழுவின் ஊடாக தீர்வுகிடைக்குமென எமக்கு நம்பிக்கையில்லை.

மேலும் தொழில்நுட்ப குழுவை நாம் பல தடவைகள் சந்தித்துள்ளோம். ஒரு சந்தர்ப்பத்தில் சடலங்களை நல்லடக்கம் செய்ய குறித்த குழு இணங்கியிருந்தது. அதற்காக மன்னார் பகுதியில் காணியொன்றும் அடையாளங்காணப்பட்டது. ஆனால், பின்னர் அந்தத் தீர்மானத்தை மாற்றிக்கொண்டது. 

அரசாங்கம் இந்த விடயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அமையும் ஒவ்வொரு அரசாங்கங்களும் நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் கௌரவமளித்திருந்தன. இந்த அரசாங்கமும் முஸ்லிம்களின் கலாசாரத்தை மதிக்குமென நம்புகிறோம். 

உலகின் ஏனைய நாடுகளில் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனமும் சடங்களை அடக்க செய்ய முடியுமென கூறியுள்ள நிலையில் தொழில்நுட்ப குழு அனுமதிவழங்காதுள்ளது. அதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் சாதகமான முடிவை எடுக்குமென நம்புகிறோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »