ஹம்பாந்தோட்டை சூரியவெவ, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அங்குரார்ப்பண லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கோல் க்ளடியேட்டர்ஸ் அணி தனது முதலாவது வெற்றியை இன்று பதிவுசெய்தது.
கலம்போ கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் 14ஆவது போட்டியில் கோல் களடியேட்டர்ஸ் அணி 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த சுற்றுப் போட்டியில் தொடர்ச்சியாக 5 தோல்விகளைத் தழுவிவந்த கோல் க்ளடியேட்டர்ஸ் பெரும் அழுத்தத்துக்கு மத்தியில் இன்றைய போட்டியை எதிர்கொண்டது.
அரை இறுதிக்கு தெரிவாவதற்கு எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற அழுத்தத்துக்கு மத்தியில் இன்று பெறப்பட்ட வெற்றி கோல் க்ளடியேட்டர்ஸுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பது உறுதி.
அத்துடன் இந்த சுற்றுப் போட்டியில் மொஹம்மத் ஆமிர் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார். அவரது திறமையான பந்துவீச்சே கோல் க்ளடியேட்டர்ஸின் வெற்றிக்கு அடிகோலியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கலம்போ கிங்ஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
டெனியல் பெல் ட்ருமண்ட் 44 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 35 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் திக்ஷில டி சில்வா 27 ஓட்டங்களையும் இசுறு உதான 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் உட்பட ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிகத் தவறியமை கலம்போ கிங்ஸுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
கோல் க்ளடியேட்டர்ஸ் பந்துவீச்சில் மொஹம்மத் ஆமிர் 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் லக்ஷான் சந்தகேன் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் க்ளடியேட்டர்ஸ் 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
அஹ்சான் அலி 56 ஓட்டங்களையும் தனுஷ்க குணதிலக்க 38 ஓட்டங்களையும் பெற்று ஆரம்ப விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஆனால். இருவரும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து அணித் தலைவர் பானுக்க ராஜபக்ஷ (37 ஆ.இ.), அஸாம் கான் (35 ஆ.இ.) ஆகியோர் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.
ஆட்டநாயகனாக மொஹம்மத் ஆமிர் தெரிவானார்.
இந்த சுற்றுப் போட்டியில் தனுஷ்க குணதிலக்க 300 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரரானார். அவர் 6 போட்டிகளில் 3 அரைச் சதங்கள் உட்பட 322 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.