Our Feeds


Saturday, December 5, 2020

www.shortnews.lk

LPL யாழ் மக்களுக்கு பெருமை சேர்த்த வியஸ்காந்த்!

 



லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற 11 ஆவது போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி சார்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து பிரதிநிதித்துவம் பெற்ற விஜயகாந்த வியஸ்காந்த தனது முதலாவது போட்டியில் கலந்து கொண்டார்.


யாழ்ப்பாணத்தில் இருந்து இதுவரை ஒரு கிரிக்கெட் வீரரேனும் இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றிருக்காத நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளராக கடமையாற்றும் ரசல் ஆர்னல்ட் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டிருந்த போதும், அவர் வளர்ந்தது, கொழும்பு தெஹிவளை பிரதேசத்தில் ஆகும். இந்நிலையில், வியஸ்காந்தின் வருகை காரணமாக யாழ் மக்கள் பெருமை கொள்கின்றனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து கிரிக்கெட் விளையாட்டிற்கு பிரவேசித்த வியஸ்காந்த் வலது கை சுழல்பந்து வீச்சாளராவார். கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியில் பிரதிநிதித்துவப்படுத்தி அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கு எதிராக இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டதோடு இதன்போது 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், நேற்று தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடிய வியஸ்காந்த் 4 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

அவர் தனது முதலாவது விக்கெட்டாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தீவ்ஸை வீழ்த்தியமை சிறப்பம்சமாகும்.

மேலும், பிரபல கிரிக்கெட் வீரர்களான என்ரு ரசல் மற்றும், தினேஸ் சந்திமால் ஆகியோருக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »