(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
கொரனோவினால் மரணிப்பவர்களை தகனம் செய்வது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல. தொழில்நுட்பக் குழுவின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்துக்கு செயற்பட முடியாது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல், வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எச்.எம்.ஏ. ஹலீம் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,
மரணித்தவர்களின் உடலில் இருக்கும் வைரஸ் ஒருபோதும் நீருடன் கலந்து பரவுவதில்லை என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்த வைத்தியர் நிஹால் அபேசிங்க உறுதியாக தெரிவித்திருக்கின்றார்.
மேலும் உலக சுகாதார அமைப்பின் தீர்மானத்தையும் தாண்டி, தொழில்நுட்ப குழு இந்த விடயத்தில் இந்தளவு பிடிவாதமாக இருப்பது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு இனத்தை பழி தீர்ப்பதற்காக செய்கின்றார்களா என எண்ணத்தோன்றுகிறது என்றார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனாவில் மரணிப்பவர்களின் இறுதிக்கடமை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவுக்கே வழங்கப்பட்டுள்ளது.. இதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கும் அரசாங்கத்துக்கும் அமைச்சரவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் அரசாங்கம் தலையிடுவதில்லை.
குறித்த தொழில்நுட்ப குழு எடுக்கும் தீர்மானத்தையே அரசாங்கம் பின்பற்றுகின்றது. அதனை மீறி அரசாங்கத்துக்கு தீர்மானிக்க முடியாது என்றார்.